மகாதீர் மகனிடம் விசாரணை! 30 நாட்களுக்குள் சொத்துகளை அறிவிக்க உத்தரவு

கோலாலம்பூர், ஜன. 19 –
தற்போது நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணைக்கு உதவும் வகையில், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் மகன் மிர்ஸான் மகாதீர் விசாரிக்கப்பட்டிருப்பதை, மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று உறுதிப்படுத்தியது.

இந்த அழைப்பைத் தொடர்ந்து மிர்ஸான், நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள தனது தலைமையகத்திற்கு வந்ததாக, எம்ஏசிசி கூறியது.

“உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமது அனைத்து அசையும், அசையா சொத்துகளின் விவரங்களையும் அறிவிக்குமாறு கோரும் ஓர் அறிக்கையை மிர்ஸானிடம் எம்ஏசிசி வழங்கியது.

“தமது சொத்துகள் அனைத்தையும் சமர்ப்பிக்க, மிர்ஸானுக்கு அறிக்கைக் கிடைத்த நாளில் இருந்து 30 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது” என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் எம்ஏசிசி தெரிவித்தது.

தமது பொறுப்பின் கீழ் வைத்திருக்கும் அனைத்து அசையும், அசையா சொத்துகளின் விவரங்களை அறிவிக்குமாறு மிர்ஸானைக் கோரும் அறிக்கை, 2009-ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டத்தின் செக்ஷன் 36(1)(பி)-யின் கீழ் அவரிடம் வழங்கப்பட்டிருப்பதாக எம்ஏசிசி தெரிவித்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பண்டோரா, பனாமா பேப்பர்ஸில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தி வருவதாக எம்ஏசிசி கூறியது.

“இது நாள் வரையில், 10 சாட்சிகள் அழைக்கப்பட்டுள்ளனர். அவ்விரு பேப்பர்களில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சொத்து உரிமை மற்றும் நிதி அறிக்கைகளை எம்ஏசிசி ஆராய்ந்து வருகிறது” என்று அது கூறியது.

மிர்ஸான், டாக்டர் மகாதீரின் மூத்த மகனாவார்.