நடப்பு அரசாங்கத்தைத் தொந்தரவு செய்யாதீர்கள்!
“மாமன்னராக பதவி வகித்த ஐந்தாண்டு காலத் தவணை முழுமையிலும் நாட்டிற்கான சிறந்ததை நான் செய்து முடித்துள்ளேன்.
“ஆனால், மக்கள் இன்னமும் பிளவுபட்டிருந்தால் இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறுவது வருத்தமாக இருக்கிறது” என்று, மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தப்பா பில்லா ஷா வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்க்க விரும்பும் குறிப்பிட்ட தரப்பினரின் செயல் இன்னமும் நீடித்திருப்பதை அம்பலப்படுத்தியிருக்கும் நடப்பு அரசியல் நிலவரம், மிகவும் எரிச்சலை ஊட்டுகிறது. காரணம், அது நாட்டின் நிலைத்தன்மைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதுடன் இழப்பையே கொண்டு வரும் என்றும் சுல்தான் அப்துல்லா வருத்தம் தெரிவித்தார்.
அரசாங்கத்தை நிர்வகிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்றும் ஐந்தாண்டு தவணைக் காலத்திற்கு முன்னரே ஆட்சியைக் கவிழ்க்க முயலும் குறிப்பிட்ட தரப்பினரின் செயல், நாட்டை வேறு எங்கும் கொண்டு சென்று விடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எந்த ஓர் அரசியல் கட்சியையும் இழிவுபடுத்த நான் விரும்பவில்லை. ஆனால், ஆட்சியை மாற்றும் முயற்சியானது நாட்டிற்கு பேரிழப்பை கொண்டு வரும் ஒரு செயல்.
“ஐந்து ஆண்டுகளுக்கு மாமன்னராக பதவி வகித்த காலகட்டத்தில், நான் நான்கு பிரதமர்களைக் கொண்டிருந்தேன். அது, நான் எதிர்நோக்க நேரிட்ட ஒரு மிகப் பெரிய சவாலாகும். மாமன்னராக இருந்த (கடைசி) நாள் வரைக்கும், நாட்டின் நிலைத்தன்மை உட்பட நாட்டை அமைதிப்படுத்தவும் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் இறுதி வரை முயன்றேன்.
“அரசாங்கத்தை நிர்வகிப்பது அவ்வளவு சுலபமல்ல. நாட்டின் நிதி வளத்திற்கும் மக்களுக்கும் இழப்பையே ஏற்படுத்தும் என்பதால், விருப்பப்படி ஆட்சியை மாற்றிக் கொண்டிருக்கவும் முடியாது” என்று, சுல்தான் அப்துல்லா குறிப்பிட்டார்.
“ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் மக்கள் அரசாங்கத்தைத் தேர்வு செய்ய முடியும் என்று எழுதப்பட்டுள்ள ஜனநாயக செயல்முறையை நாம் கொண்டிருக்கின்றோம். ஆதலால், நிர்ணயிக்கப்பட்டுள்ள தவணை வரையில் நாட்டை ஆட்சி புரிய நடப்பு அரசாங்கத்தை விட்டு விடுங்கள். மாறாக, ஓராண்டு அல்லது ஈராண்டுக்கு ஒரு முறை விருப்பப்படி ஆட்சியை மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்” என்று, சுல்தான் அப்துல்லா அறிவுறுத்தினார்.
தமது ஐந்தாண்டு கால மாமன்னர் அரியணையை நேற்று செவ்வாய்க்கிழமையோடு நிறைவு செய்வதற்கு முன்னர், இஸ்தானா நெகாராவில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மிக அரிதான செய்தியாளர்கள் சந்திப்பை சுல்தான் அப்துல்லா நடத்தியிருந்தார்.