மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மண்டப குளிர்சாதன வசதிக்கு லிம் குவான் எங் நிதி உதவி

மாக் மண்டின், ஜன. 31-
பட்டர்வொர்த் வட செபராங் பிறை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் குளிர்சாதன வசதியை மேம்படுத்த பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் ரிம 48,000 வழங்கி ஆதரவளித்தார்.பள்ளிக்கு வருகையளித்த அவர் பள்ளி மண்டபத்துக்கான காசோலையை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் பள்ளி மேலாளர் வாரிய குழுத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலத்திடம் வழங்கினார்.


பள்ளி மண்டபத்துக்கான குளிர்சாதன வசதியை மேம்படுத்த வேண்டி பள்ளி வாரிய குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து பாகான் நாடாளுமன்றத்திலிருந்து லிம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் இது போன்ற பல்வகை வசதிகள் கொண்ட மண்டபத்தை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி கொண்டிருப்பது கண்டு தாம் மகிழ்ச்சியடைவதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் பல நிகழ்ச்சிகளை நடத்த இந்த மண்டபம் சிறந்த பயன்பாடாக அமையும் என்பதுடன்,சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் இந்த மண்டபத்தைப் பயன்படுத்தி பயன் பெறுவதுடன் இதனால் பள்ளிக்கு ஒரு நிரந்தர வருமானத்தை அளிக்க முடியுமென லிம் நம்பிக்கை தெரிவித்தார்.
மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் மண்டபம் டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம் மேற்பார்வையில் ரிம 5 மில்லியன் செலவில் கட்டப்பட்டதுடன் இதன் கட்டடக் குழுவின் தலைவராக வழக்கறிஞர் சரவணன் இருந்து செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்ச்சியில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கீன் உடன் கலந்து கொண்டனர்.