2023 ஆம் ஆண்டுக்கு வெ 5 லட்சம் ஒதுக்கீட்டு தொகையை துணை அமைச்சர் சரஸ்வதி வழங்கினார்
கடந்த 2023 ஆம் ஆண்டுக்கு சமூகங்களின் வளர்ச்சிப் பணிக்காக தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வெ 5 லட்சம் ஒதுக்கீட்டு தொகையை வழங்கினார்.குறிப்பாக வசதி குறைந்த மக்களின் நலன்களுக்காக இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக செனட்டர் சரஸ்வதி கூறினார்.
இந்த ஒதுக்கீட்டுத் தொகையை பெற்றவர்கள் செலவிட்ட தொகைக்கான கணக்கறிக்கை, நடவடிக்கை பணிகளின் புகைப்படங்கள், பொருட்கள் வாங்கியதற்கான ரசீதுகள், இதர விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த தகவல்களை குறிப்பிட்ட காலத்திற்குள் சிலாங்கூர் மாநில மத்திய மேம்பாட்டு அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ‘அதேவேளையில் எனது அலுவலகத்திலும் நகல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்‘என அவர் கேட்டுக்கொண்டார்.
அப்படி அறிக்கைகள், செலவின அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறும் அமைப்புகள் அல்லது நடவடிக்கை குழுக்களின் வருங்கால கோரிக்கைகள் இனியும் கவனத்தில் கொள்ளப்படாது என பிகேஆர் உதவி தலைவருமான அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த ஒதுக்கீட்டுத் தொகையில் கோவில்கள், சீன கோவில்கள்,சூராவ் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு வெ 53,250 ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்விப் பணிகளுக்கு வெ 229,237.30 ஒதுக்கீடு செய்யப்பட்டது. கொண்டாட்டங்கள் சிறப்பு நாட்கள், விழா நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு வெ 45,500 வழங்கப்பட்டது. மருத்துவமனை, கிளினிக், மருத்துவ செலவுகளுக்கு வெ 9,120.00 வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
மேலும் தொழில் முனைவர் நிகழ்ச்சிகள், வியாபாரம் போன்ற திட்டங்களுக்கு வெ 28,000.00 ஒதுக்கீடு செய்யப்பட்டது. சமூக நல திட்டங்களுக்கு வெ.57,892.70 வழங்கப்பட்டது. இயக்கங்கள், கிளாப்புகளின் நடவடிக்கை பணிகளுக்கு வெ.77,000.00 ஒதுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த ஒதுக்கீட்டு தொகைகளை பெற்ற தரப்பினர் மக்களின் நலன் திட்டங்களுக்கு மட்டுமே இந்த பணத்தை செலவிட்டு இருக்க வேண்டும் என செனட்டர் சரஸ்வதி நினைவுறுத்தினார்.