இந்தியர்களின் முக்கியத்துவத்தை அந்தோணி லோக் உணர்வாரா?-ஓம்ஸ் தியாகராஜன் கேள்வி

கோலாலம்பூர், பிப்.1-
வரும் 16ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்பும் தேசிய முன்னணி – பக்காத்தான் கூட்டணி தொடரும் என்று ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனாலும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் முக்கிய பதவி விவகாரத்தில் ஜசெக அலட்சியம் காட்டுவது ஏற்புடையதுதானா என்று அந்தோணி லோக் சிந்திக்க வேண்டும் என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.


நடந்து முடிந்த 6 மாநில சட்டமன்றத் தேர்தலின்போது ஜசெக பினாங்கு மாநிலத்தில் வெற்றி கண்டது. இருப்பினும் முன்னாள் துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமிக்கும் தங்கள் கட்சியான ஜசெகவுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருக்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அதனால் தமிழர் ஒருவர் வகித்த துணை முதல்வர் பதவி பறிபோனது. பறிபோனதற்குப் பிறகும் மீண்டும் ஒரு தமிழருக்கு அதே பதவியைக் கொடுக்காமல் போனது ஜசெக செய்த மிகப் பெரிய இருட்டடிப்பு என்பதை யாராலும் மறந்துவிட முடியாது.


சீக்கியர் ஒருவருக்கு அந்தப் பதவியைக் கொடுத்ததற்கு என்ன காரணம் என்பதை அந்தோணி லோக்கால் வெளிப்படையாகக் கூற முடியுமா?
என்னைப் பொறுத்தவரை கோபிந்த் சிங் எனக்கு நெருங்கிய நண்பராவார். அவரின் தந்தையார் வழக்கறிஞர் கர்ப்பால் சிங் நாடறிந்தவர் என்பதை மறுக்க முடியாது.
போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் தேசிய முன்னணியும் அவர் அங்கம் வகிக்கின்ற பக்காத்தான் கூட்டணியும் கீரியும் பாம்புமாக இருந்ததை அவர் எளிதில் மறந்துவிட முடியாது.
முடிந்த தேர்தலுக்குப் பிறகு ஜசெகவில் இந்தியத் தலைவர்கள் எத்தனை பேர் மதிக்கும்படியாக நடத்தப்பட்டார்கள் என்பதை மனசாட்சி உடையவர்கள், குறிப்பாக அந்தோணி லோக் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்தியர்களின் ஒற்றுமைப் பேரணியான ஹிண்ட்ராப் மட்டும் தோன்றியிருக்காவிட்டால், ஜசெக அன்று காணாமல் போயிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


ஹிண்ட்ராப் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் இந்தியர்களின் வாக்கு தேசிய முன்னணிக்கு எதிராகவும் ஜசெகவுக்கு ஆதரவாகவும் திரும்பின. இந்தியர்கள் வழங்கிய யாசகத்தால், பினாங்கு மாநிலம் உயிர் பிழைத்து ஜசெகவிடம் வந்தது.
துணை முதல்வர் பதவியில் கூட ஜசெக காட்டிய அக்கறையின்மைதான், ஒரு தமிழருக்கு அப்பதவி கிடைக்காமல் போனது.
ஆறு மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் ஜசெக வீழ்ச்சி கண்டதை அந்தோணி லோக் புரிந்து கொள்ள வேண்டும்.
சீக்கியர்களுக்கு சீனர்களின் வாக்குகள் முக்கியமாக இருக்கலாம். ஆனால் சீனர்களுக்கு இந்தியர்களின் வாக்குகள் மிக மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது.


புதிதாக தேசிய முன்னணியுடன் பக்காத்தான் கூட்டணி தொடரும் என்று பேசும் அந்தோணி லோக், இந்தியர்களின் வலிமையையும் உணர வேண்டும். இரண்டு கூட்டணிகளும் தொடர வேண்டுமானால் இந்தியர் சார்ந்த தமிழருக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அரிமா எனப்படும் மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இயக்கத்தின் தேசியத் தலைவருமான ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.