குளத்தில் மூழ்கி ஆண்குழந்தை உயிரிழப்பு;முன்னாள் ஆசிரியை மீது மீண்டும் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஜன. 31-
நான்கு வயதான ஆண்குழந்தையொன்று நீச்சல் குளத்தில் மூழ்கி மாண்ட சம்பவம் தொடர்பில் தனியார் பாலர் பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஒருவர் மீது ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டது.எஸ்பி எஸ்தர் கிறிஸ்டினா ( வயது 59) எனும் அந்த ஆசிரியையின் அலட்சிய போக்கினால்தான் அக்குழந்தை இறக்க வேண்டி வந்தது என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதி அய்னுல் ஷாரின் முகமது முன்னிலையில் சுமத்தப்பட்ட அக்குற்றச்சாட்டை எஸ்தர் மறுத்தார்.
கடந்தாண்டு ஜூலை 12ஆம் தேதியன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அதே குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டது. ஆயினும், எஸ்தரை வழக்கிலிருந்து விடுவிக்காமலேயே குற்றச்சாட்டிலிருந்து மாஜிஸ்திரேட் நோரா ஷரிப் அப்போது விடுதலை செய்தார்.வி.தனேஷ் நாயர் என்ற அக்குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு எஸ்தரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தபோதும் நீண்ட நேரத்திற்கு அவனை அவர் கவனிக்காமல் இருந்துள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10.20மணியளவில் ஈப்போ,பண்டார் பாரு ஸ்ரீ கிளேபாங் எனும் இடத்தில் உள்ள செண்ட்ரோ கிளப் நீச்சல் குளத்தில்
அக்குற்றம் இழைக்கப்பட்டது.2001ஆம் ஆண்டு சிறார் சட்டம் 33(1)(எ)ஆவது பிரிவின்கீழ் அக்குற்றம் சுமத்தப்பட்டது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகப்பட்சம் இருபதாயிரம் வெள்ளி அபராதம் அல்லது ஐந்தாண்டுகள் வரைக்குமான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படலாம்.
எஸ்தரை ஐயாயிரம் வெள்ளி தனிநபர் பிணையுறுதியில் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இவ்வழக்கின் மறுவாசிப்பு மார்ச் 21ஆம் தேதியன்று நடைபெறும்.