மகன் தனேஷை இழந்த சோகம் மறையவில்லை ஆறாத் துயரத்தில் அன்னை

கோலாலம்பூர், பிப். 2-
இன்று வரையில் என் மகனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. என்ன நடந்தது என்று தெரியாமல் குரல் எழுப்ப முடியாத நிலையில் உள்ளேன் என்று தன் துயரத்தை வி. தனேஷ் நாயரின் தாயார் தமிழ் மலரிசம் நேற்று தெரிவித்தார்.
கடந்தாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10.20மணியளவில் ஈப்போ,பண்டார் பாரு ஸ்ரீ கிளேபாங் எனும் இடத்தில் உள்ள செண்ட்ரோ கிளப் நீச்சல் குளத்தில் வி.தனேஷ் நாயர் என்ற நான்கு வயதான நீச்சல் குளத்தில் மூழ்கி மரணம் அடைந்தான்.
அந்த வழக்கு தொடர்பாக 59 வயதான எஸ்பி எஸ்தர் கிறிஸ்டினா எனும் பாலர் பள்ளியின் தலைமையாசிரியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஈப்போ மாஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் ஜூலை 12ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது.
தற்போது அந்த வழக்கு ஈப்போ செக்ஷன் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.


நீதிமன்றத்தில் இதுவரையில் எந்தவொரு ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. பேச்சு இன்னும் நடத்தப்படாத வேளையில் ஆதாரங்களை வழங்குவதற்கு காலம் தாமதம் ஏற்படுகின்றது என்று அவர் தெரிவித்தார்.
இவ்வழக்கின் மறுவாசிப்பு செக்ஷன் நீதிமன்றத்தில் மார்ச் 21ஆம் தேதுயன்று நடைபெறும். அப்பொழுது என் மகனுக்கு முழுமையாக என்ன நேர்ந்திருக்கும் என்ற விளக்கம் கிடைக்குமென அவர் தெரிவித்தார்.
என் மகனுக்கு நடந்த துயரச் சம்பவத்திற்கு யார் பொறுப்பு, என்ன நிகழ்ந்திருக்கும் என்ற தெளிவெல்லாம் அதன் பிறகே தெரியும் என்றார்.
என் மகன் இறந்து 7 மாதம் காலமாகியும் இந்த வழக்குக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. குற்றம் சுமத்தப்பட்ட தலைமையாசிரியர் போதிய ஒத்துழைப்பு வழங்காததாலும் விசாரணைகளைத் தட்டிக் கழித்து வந்ததாலும் இதுவரையில் இது நீடித்து வந்தது.


இதற்கிடையில், காவல்துறையினரும் வழக்கறிஞர்களும் இதற்கு போதிய அளவில் ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், தற்பொழுது இதற்கு ஒரு விடிவு காலம் பிறந்துள்ளது என்றே சொல்ல முடியும். கூடிய விரைவில் என் இந்த வழக்கு செக்ஷன் நீதிமன்றத்தில் மறுவாசிப்பு நடத்தப்படும் என்று அவர் கூறினார்.