விசாகப்பட்டினத்திற்கு மீண்டும் சிறகடிக்கிறது ஏர் ஆசியா
சிப்பாங், பிப். 2-
இந்தியர்களை அதிகம் கவரும் நகரான விசாகப்பட்டினத்திற்கு உலகின் தலைசிறந்த மலிவு விலை கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா மீண்டும் சிறகடிக்கவிருக்கிறது.
வரும் 2024 ஏப். 26 ஆம் தேதி விசாகப்பட்டினத்திற்கு ஏர் ஆசியா தனது முதல் பயணத்தை தொடங்க இருப்பதாக ஏர் ஆசியா எவியேஷன் குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் கூறினார்.
வங்காள விரிகுடாவில் உள்ள இந்த கம்பீரமான நகருக்கு வாரத்திற்கு 3 விமான சேவைகளை ஏர் ஆசியா மேற்கொள்ள இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பசுமையான நிலப்பரப்பைக் கொண்ட ‘விசாக’என்று அழைக்கப்படும் இந்த நகரத்தில் நடைபெறும் பாரம்பரிய விழாக்கள் பயணிகளை அதிகம் கவரும் என்றார் அவர்.
பல அழகான மலைப் பகுதிகளை கொண்ட இந்த நகரம் உள்நாடு, வெளிநாட்டு பயணிகளை அதிகம் கவர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இப்பொழுது முதல் 2024 ஏப்ரல் 14 ஆம் தேதி வரை விசாகப்பட்டினத்திலிருந்து கோலாலம்பூருக்கு ஒரு வழி கட்டணம் வெ.199 அல்லது ரூபாய் 4,999 தான் என அவர் தெரிவித்தார்.
இந்த கட்டணத்தில் 2024 ஏப்ரல் 26 முதல் 2025 மார்ச் 19 வரை பயணிக்கலாம் என அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் தனது விரிவாக்கத்தில் விசாகப்பட்டினம் ஒரு முக்கிய பகுதியாகும் என அவர் சுட்டிக் காட்டினார்.
2024 ஆம் ஆண்டில் மலேசியா மற்றும் இந்தியாவிற்கு இடையே ஏர் ஆசியா தொடர்ந்து தனது விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தென்னிந்தியாவில் சென்னை, திருச்சிராப்பள்ளி, கொச்சின், ஹைதராபாத், பெங்களூரு, கல்கத்தா ஆகிய நகர்களுக்கு ஏர் ஆசியா தனது சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
வட இந்தியாவில் புது டில்லி, அமிர்தசரஸ் ஆகிய நகர்களுக்கு ஏர் ஆசியா விமானச் சேவைகளை மேற்கொண்டு வருகிறது.