12 மாணவர்கள் தமிழ் இலக்கியத் தேர்வு எழுத அனுமதி மறுப்பா?
- கல்வி அமைச்சு கவனிக்குமா?
லாவண்யா ரவிச்சந்திரன்
கோலாலம்பூர், பிப்.2-
ஜனவரி 30 முதல் 2023 ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு தொடங்கியுள்ள வேளையில் கெடா, பிடோங் இடைநிலைப்பள்ளியில் பயிலும் 12 மாணவர்கள் தமிழ் இலக்கியப் பாடம் எடுப்பதற்கான தேர்வு சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அப்பாடத்தை எடுப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தமிழ் மலர் செய்தியாளரைத் தொடர்புக் கொண்ட போது அம்மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் எஸ்.பி.எம் தேர்வு பாடங்கள் பதிவு பாரத்தை விண்ணப்பிக்கும் போது தேர்வு பாரத்தை அனுப்புவதில் கால தாமதம் ஏற்பட்டதால் குறிப்பிட்ட 12 மாணவர்களின் இலக்கியப் பாடத்தைப் பதிவு செய்யமுடியவில்லை என அப்பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.
பள்ளி நிர்வாகத்திடமும் கெடா கல்வித் துறையிடம் பலமுறை கடிதங்கள் அனுப்பி கேள்வி எழுப்பிய போதும் இதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.
மார்ச் 7, 2024 இல் எழுதவிருக்கும் இத்தேர்விற்கு மாணவர்கள் தயாராகி கொண்டிருக்கும் வேளையில், இன்னமும் தேர்வு பாரம் கிடைக்காதது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.
“இதுவரையில் நாங்கள் அனுப்பிய கடிதங்களும் கெடா மாவட்ட கல்வித் துறையைச் சந்தித்ததும், பள்ளி நிர்வாகத்திடம் ஆலோசித்த பின்னர்தான் செய்துள்ளோம். இவ்வாரத்தில் தலைமையாசிரியர் எங்களைப் புலனம் வழி தொடர்பு கொண்டு நாங்களும் மாவட்டக் கல்வி துறையிடம் கடிதம் அனுப்பி இந்நாள் வரை முயற்சி செய்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார். ஆனாலும், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என அவர் கூறியது பொறுப்பில்லாத தனத்தைத்தான் காட்டுகிறது” என்று மேலும் தெரிவித்தனர்.
அப்பள்ளியின் தலைமையாசிரியர், கெடா மாவட்டக் கல்வித்துறையின் இந்திய அதிகாரிகள், கல்வி குழும உறுப்பினர், கல்வி ஆணைக்குழு உறுப்பினர் ஆகியோரிடம் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தியதோடு அரசு சாரா இயக்கம் ஒன்று இது தொடர்பாக மேல்முறையீடு செய்துள்ள வேளையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு எங்கே என தெரியவில்லை.12 மாணவர்களின் இலக்கியப் பாடம் குறித்து பள்ளி நிர்வாகத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? கல்வி அமைச்சிலுள்ள அதிகாரிக்கு இத்தகவல் எட்டி இருக்குமா?இந்த மாணவர்களின் நிலை குறித்து கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.