அன்வாருக்கு எதிரான அவதூறு வழக்கு;திருத்தம் செய்ய மகாதீருக்கு அனுமதி

ஷாஆலம், பிப். 5-
அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான அவதூறு வழக்கில் தாம் செய்துள்ள கோரிக்கை மனுவில் திருத்தம் செய்யக்கோரிய டாக்டர் மகாதீர் முகமதுவின் விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது.இந்த விவகாரம் தொடர்பில் கோரிக்கைக் கடிதம் வெளியிட்ட பிறகும் தம்மைப் பற்றி அன்வார் சில அறிக்கைகளை வெளியிட்டிருந்தார். அவற்றையும் சேர்த்துக் கொள்ளும் வகையில் தமது கோரிக்கை மனுவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் விண்ணப்பித்திருந்தார். அதனை நீதித்துறை ஆணையர் ஸஹாரா உசேன் ஏற்றுக் கொண்டார் என்று மகாதீரின் வழக்கறிஞர் ரஃபீக் ரஷிட் அலி நேற்று தெரிவித்தார்.


மார்ச் 4ஆம் தேதிக்குள் திருத்தம் செய்யப்பட்ட கோரிக்கை மனுவை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ரஃபீக் சொன்னார்.அதன் பின்னர், மார்ச் 18ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட தமது அறிக்கையை அன்வார் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான பதில் அறிக்கையை ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் மகாதீர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ரஃபீக் சொன்னார்.


அன்வாருக்குச் செலவுத்தொகையாக மூவாயிரம் வெள்ளியை வழங்கும்படியும் மகாதீருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்வாரை பெஞ்சமின் அலிஃப், சுஹைமி, சங்கீத் கவுர் டியோ, ஃபோப் லோய் ஆகிய வழக்கறிஞர்கள் பிரதிநிதித்தனர்.
கடந்தாண்டு மார்ச் 18ஆம் தேதியன்று நடைபெற்ற பிகேஆர் மாநாட்டில் மகாதீரை இனவெறியர் என்றும் பிரதமர் பதவியில் இருந்தபோது தமது குடும்பத்தினரைப் பெரும் கோடீஸ்வரர்களாக மாற்றியவர் என்றும் அன்வார் குற்றஞ்சாட்டியிருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்பில் அவர் மீது மகாதீர் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.