இந்திராகாந்தியின் கணவர் நாட்டை விட்டுவெளியேறுவார் என்று எதிர்பார்க்கவில்லை முன்னாள் ஐஜிபி சாட்சியம்
கோலாலம்பூர், பிப். 6-
இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் தங்களின் மகளுடன் நாட்டை விட்டு தப்பியோடுவார் என போலீசார் எதிர்பார்க்கவில்லை என்று தேசியப் போலீஸ்படையின் முன்னாள் தலைவர் ( ஐஜிபி) அப்துல் ஹமீட் பாடோர் நேற்றுத் தெரிவித்தார்.
முகமது ரிடுவான் அப்துல்லா எனும் அந்நபரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு, அவர் தமது மகள் பிரசன்னா டிக்சாவுடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வார் என்பதற்கான எந்த அறிகுறிகளும் கிடைக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் நேற்று சாட்சியமளித்தபோது அவர் கூறினார்.
ரிடுவானிடமிருந்து பிரசன்னாவை மீட்பதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதியன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இண்டர்போல் நோட்டீஸை வெளியிட போலீசார் காட்டிய தாமத்தினால்தான் அந்த உத்தரவை மீறவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது என்பதையும் ஹமீட் நேற்று மறுத்தார். கே.பத்மநாதன் எனும் இயற்பெயரைக் கொண்டவரான கே.ரிடுவான், கடந்த 2009ஆம் ஆண்டில் அப்போது 11 மாதக் குழந்தையாக இருந்த பிரசன்னாவுடன் தலைமறைவானார். அதன் பின், இந்திராவின் அனுமதியின்றி இஸ்லாத்திற்கு அக்குழந்தையை மதம் மாற்றினார்.
ரிடுவானைக் கண்டுபிடித்து பிரசன்னாவை மீட்டுவரும்படி கடந்த 2016ஆம் ஆண்டில் அப்போது தேசியப் போலீஸ்படைத் தலைவராக இருந்த காலிட் அபு பக்காருக்கு கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டது.
போலீசார் மேற்கொண்டு வந்த விசாரணையைத் தொடர்ந்து, ரிடுவான் தென்தாய்லாந்தில் இருப்பது 2019ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஹமீட் தொடர்ந்து கூறினார். அந்நபர் பேராக்கிலும் கிளந்தானிலும் மறைந்திருக்கிறார் என்று அதற்கு முன்பு கிடைக்கப் பெற்ற உளவுத்துறைத் தகவல்கள் தெரிவித்தன என்றும் அவர் சொன்னார்.
ஹமீட் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2021ஆம் ஆண்டு மே மாதம்வரை தேசியப் போலீஸ்படைத் தலைவராக சேவையாற்றினார்.
ரிடுவானைக் கைதுசெய்து பிரசன்னாவை திரும்ப அழைத்து வருமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று நடக்க மறுத்ததற்காக ஐஜிபி, அரசாங்கம், போலீஸ் மற்றும் உள்துறை அமைச்சின் மீது பாலர் பள்ளி ஆசிரியையான இந்திரா கடந்த 2020ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். அவரை வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் பிரதிநிதிக்கிறார்.