கிள்ளான் நகராண்மை மன்றத்தை அரச கிள்ளான் மாநகராண்மை மன்றமாக சுல்தான் ஷராஃபுடின் நிரகடனம்

கோலாலம்பூர், பிப். 6 –
சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா, கிள்ளான் நகராண்மை மன்றத்தை அரச கிள்ளான் மாநகராண்மை மன்றமாக நேற்று பிரகடனம் செய்தார். இப்பிரகடனம் கடந்த ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

1976-ஆம் ஆண்டு ஊராட்சிமன்ற சட்டத்தின் செக்ஷன் 10(1)-க்கு இணங்க, நோராய்னி ரொஸ்லான் என்பவரை அரச கிள்ளான் மாநகராண்மை மன்ற மேயராக சுல்தான் ஷராஃபுடின் அறிவித்தும் உள்ளார்.

நாட்டின் 20-ஆவது மாநகரமாக கிள்ளான் அறிவிக்கப்படும் என்று, ஊராட்சி மன்றத்துறை அமைச்சர் ஙா கோர் மிங் கடந்த ஆண்டில் அறிவித்திருந்தார்.

பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் சுபாங் ஜெயாவுக்கு அடுத்து சிலாங்கூரின் நான்காவது மாநகரமாக கிள்ளான் தற்போது விளங்குகிறது.

நாட்டில் இதர மாநகரங்களாக ஆராவ் (பெர்லிஸ்), அனாக் புக்கிட் (கெடா), கோல கங்சார் (பேராக்), ஸ்ரீ மெனாந்தி (நெகிரி செம்பிலான்), மூவார் (ஜொகூர்), அல்-முஹமடி குபாங் கிரியான் (கிளந்தான்), கோலத் திரெங்கானு (திரெங்கானு) மற்றும் பெக்கான் (பகாங்) ஆகியவையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கிள்ளானின் தற்போதைய மக்கள் தொகை எண்ணிக்கை ஐந்து லட்சத்துக்கும் மேல் அதிகரித்திருப்பதுடன் அதன் ஆண்டு வருமானமும் 10 கோடி வெள்ளிக்கு மேல் உயர்ந்துள்ளதன் காரணத்தினால், அந்த 133 ஆண்டு பழைமையான நகரை மேம்படுத்துவதென்று முடிவு செய்யப்பட்டதாக ஙா தெரிவித்தார்.

அந்த 10 கோடி வெள்ளி வருமானத்தில் ஒரு கோடி வெள்ளி புதிய மாநகராண்மை மன்ற மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் என்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் தனது சார்பில் 50 லட்சம் வெள்ளியை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.