நஜிப்பின் தண்டனை குறைப்பு:கண்டனத்தை நிறுத்துவீர்!
புத்ராஜெயா, பிப்.6-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையும் அபராதமும் குறைக்கப்பட்டிருப்பதைக் குறைகூறுவதையும் கண்டனம் தெரிவிப்பதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் அனைத்துத் தரப்பினரும் அரச மன்னிப்பு வாரியத்தின் முடிவை மதிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னிப்பு வாரியத்தின் அம்முடிவு சட்டவிவகாரம் சம்பந்தப்பட்டதல்ல. மாறாக, மாட்சிமை தங்கிய மாமன்னரின் கருணை சம்பந்தப்பட்ட ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.
கருணை, பாசம் ஆகியவற்றை முதன்மையான அம்சங்களாகக் கொண்டுதான் அது ஆராயப்பட்டது. முன்னாள் பேரரசர் குறிப்பிட்டதுபோல் அது கருணையின் ஊற்று என்றார் அன்வார்.அந்த விவகாரம் குறித்து விளக்கமளிப்பதா இல்லையா என்பது மாமன்னரின் தனியுரிமைக்கு உட்பட்டதாகும் என்று புத்ராஜெயாவில் பிரதமர்துறையின் மாதாந்திர ஊழியர்கள் கூட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் சொன்னார்.
நஜிப்புக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையை ஐம்பது விழுக்காட்டுக்கு குறைத்துள்ள மன்னிப்பு வாரியத்தின் முடிவு பற்றி கருத்துரைத்தபோது அன்வார் இதனைத் தெரிவித்தார்.அவரின் அபராதமும் 21 கோடி வெள்ளியிலிருந்து ஐந்து கோடி வெள்ளியாக குறைக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், அபராதத்தைக் கட்டத் தவறினால் அவர் மேலும் கூடுதலாக ஓர் ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டிவரும். இதனால், அவர் 2029ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதிதான் விடுவிக்கப்படுவார் என்று மன்னிப்பு வாரியத்தின் செயலகம் குறிப்பிட்டது.1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்குச் சொந்தமான நான்கு கோடியே இருபது லட்சம் வெள்ளியை மோசடி செய்த குற்றத்திற்காக 12ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 21 கோடி வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.தற்போது 1எம்டிபி ஊழல் தொடர்பான இதர சில வழக்குகளை அவர் எதிர்கொண்டு வருகிறார்.