நேரடியாக என்னை ஆதரிக்க வேண்டாம்
கோலாலம்பூர், பிப். 6 –
தேச நிந்தனைச் சட்டத்தின் கீழான ஒரு விசாரணைக்காக நேற்று அழைக்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் தமக்கான தனது ஆதரவை ஜசெக நேரடியாக அறிவிக்க வேண்டியதில்லை என்று டோனி புவா கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
“முக்கியமான விசயம் என்னவென்றால், ஒற்றுமை அரசாங்கத்தில் ஜசெக தலைவர்கள் தங்களின் பணியை ஆற்ற வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் அதுதான் முக்கியமானது” என்று ஜசெகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டோனி புவா தெரிவித்தார்.
போலீசார் பறிமுதல் செய்ய விரும்பும் தமது மடிக் கணியை தாம் அவர்களிடம் ஒப்படைக்க விருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“எனது முகநூல் கணக்கினுள் நுழைய வேண்டியிருப்பதாகவும் அவர்கள் (போலீசார்) கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அது எதற்காக என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், நான் அதை அவர்களிடம் வழங்க வேண்டியுள்ளது” என்று புவா கூறினார்.
“நான் பணி ஓய்வு பெற்றுவிட்டதால், அது எனக்கு குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அடிப்படையில்லாததாக தோன்றும் ஒன்றை விசாரிக்க போலீசாரின் நேரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
தமது பார்வையில், பகிரப்பட்ட செய்திகள் தேச நிந்தனைக்கு உட்பட்டவை அல்ல அல்லது தேச நிந்தனைச் சட்டத்தை மீறிவதாக இல்லை என்று அவர் கூறினார்.
“அச்செய்திகளை நான் இரண்டு மூன்று முறை சரி பார்த்திருக்கின்றேன். ஐந்து அல்லது ஆறு முறைகூட இருக்கலாம். ஒவ்வொரு இரவிலும் அவற்றை நான் படித்திருக்கின்றேன். அவற்றை தேச நிந்தனையாக எப்படி பார்க்க முடியும்? அப்படி ஒன்றுமில்லை.
“போலீசாருக்கு நான் முழு ஒத்துழைப்பை வழங்கி இருக்கின்றேன். ஒரு கணினி அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தி அச்செய்திகளை நானே எழுதி பதிவேற்றம் செய்தேனா என்று கேள்விகள் கேட்கப்பட்டன” என்று புவா கூறினார்.