திட்டமிட்டபடி பங்கோர் தமிழ்ப்பள்ளி கட்டி முடிக்கப்படும் சிறப்பு அதிகாரி தியாகராஜ் அறிவிப்பு

பங்கோர், பிப்.7-
பேராக் மாநிலத்தில் உள்ள கடற்கரையில் அமைந்துள்ள பங்கோர் தேசியவகை தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்தின் கட்டுமானத்தை அதன் குத்தகையாளர் கட்டுவதில் சிரமத்தை எதிர்நோக்கியதை அடுத்து அப்பள்ளியின் நிலவரம் குறித்து அங்குள்ள பொறுப்பாளர்களிடம் தாம் கலந்தாலோசித்ததாக கல்வி அமைச்சர் பட்லினா சிடேக்கின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் கூறினார்.


பள்ளியின் புதிய கட்டடத்தை கடந்தாண்டு ஜூலை 3ஆம் தேதி கட்டி முடித்திருக்க வேண்டும். இருப்பினும் அந்த குத்தகை நிறுவனத்திற்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை கட்டுமானத்திற்கான கால நீட்டிப்பை பொதுப்பணித்துறை வழங்கியது.
இருப்பினும் அந்த குத்தகையாளர் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கட்டடத்தைக் கட்டி முடிக்கவில்லை என்று தியாகராஜ் கூறினார்.


இது தொடர்பாக மஞ்சோங் மாவட்ட பொதுப்பணித் துறை பிரதிநிதி துவான் ஹாஜி மூசா பின் ஹமிட்டுடன் சந்திப்பு நடைபெற்றதாகக் கூறிய தியாகராஜ், இப்பள்ளி கட்டடம் குறித்து இவ்வாண்டு மே மாதத்தில் மறு குத்தகை விடப்படும் என்று அறிவித்தார்.


தற்போது பள்ளி கட்டடக் கட்டுமானப் பகுதியில் 25 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்குள் இத்திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கட்டட கட்டுமானத்தில் ஆறு வகுப்பறைகள் உள்ளிட்ட பள்ளிக்கு இதர வசதிகளும் செய்து தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பொதுப்பணித் துறையின் உடனடி நடவடிக்கைக்கு கல்வி அமைச்சர் பட்லினா சிடேக், தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் என்று தியாகராஜ் கூறினார்.