மகாதீரின் மகன்களுக்கு எம்ஏசிசி எச்சரிக்கை!
கூச்சிங், பிப். 7 –
நிர்ணயிக்கப்பட்டுள்ள நாட்களுக்குள் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்கத் தவறினால், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் இரண்டு மகன்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றம் சுமத்தப்படலாம் என்று, மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி கூறியுள்ளார்.
காலஅவகாசம் நெருங்கி வரும் வேளையில், மிர்ஸான் மகாதீரும் டான் ஸ்ரீ மொக்ஷானி மகாதீரும் இன்னும் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை. அவ்வாறு செய்யுமாறு கோரும் நோட்டிஸ் கடந்த மாதத்தில் அவர்களிடம் வழங்கப்பட்டு விட்டது என்று அவர் தெரிவித்தார்.
2009-ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டம் செக்ஷன் 36-க்கு இணங்க அந்த நோட்டிஸ்கள் வழங்கப்பட்டுவிட்ட போதிலும், அவர்கள் இருவரின் சொத்து அறிவிப்புகளுக்காக தாங்கள் இன்னமும் காத்திருப்பதாக, அஸாம் பாக்கி தெரிவித்தார்.
“நிர்ணயிக்கப்பட்டுள்ள நாட்களுக்குள் மிர்ஸானும் மொக்ஷானியும் அவ்வாறு செய்யவில்லையென்றால், சொத்துகளை அறிவிக்கத் தவறியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும்.
ஆனால், வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் முடிந்த பின்னர் கால அவகாச நீட்டிப்புக்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்று, சரவாக், கூச்சிங்கில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அஸாம் பாக்கி தெரிவித்தார்.
மிர்ஸான் மற்றும் மொக்ஷானி தொடர்பான விசாரணையில் பல அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அவற்றில் சொத்து அறிவிப்பும் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
“இதன் அர்த்தமானது, முதலில் விசாரணையை நாங்கள் முழுமைப்பெறச் செய்ய வேண்டியிருப்பதால், அவர்கள் மீது குற்றம் சுமத்தும் நடைமுறை தாமதமாகலாம்” என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமது அனைத்து அசையும் அசையா சொத்துகளின் விவரங்களையும் அறிவிக்குமாறு கோரும் ஓர் நோட்டிஸை மிர்ஸானிடம் எம்ஏசிசி கடந்த ஜனவரி 18-ஆம் தேதி வழங்கியிருந்தது.
“தமது அனைத்து சொத்துகளின் விவரங்களை சமர்ப்பிக்க, மிர்ஸானுக்கு அறிக்கைக் கிடைத்த நாளில் இருந்து 30 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது” என்று, அன்றைய தினம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் எம்ஏசிசி தெரிவித்திருந்தது.
தமது பொறுப்பின் கீழ் வைத்திருக்கும் அனைத்து அசையும் அசையா சொத்துகளின் விவரங்களை அறிவிக்குமாறு மிர்ஸானைக் கோரும் அறிக்கை, 2009-ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டத்தின் செக்ஷன் 36(1)(பி)-யின் கீழ் அவரிடம் வழங்கப்பட்டிருப்பதாகவும் எம்ஏசிசி கூறியிருந்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பண்டோரா, பனாமா பேப்பர்ஸில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மீது எம்ஏசிசி விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், 2001-ஆம் ஆண்டு கள்ளப் பணப் பரிமாற்ற தடுப்பு, பயங்கரவாதத்திற்கு நிதி உதவியளித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பணம் பெற்றல் தடுப்பு சட்டம் (அம்லா) மற்றும் 2009-ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டத்தின் கீழ் மொக்ஷானி மீது விசாரணை நடத்தப்படுகிறது.