மித்ரா நிதி விவகாரத்தில் குளறுபடிகள், குழப்படிகள் எம்ஏசிசியின் பார்வை மித்ரா பக்கம் திரும்புமா? -ஓம்ஸ் தியாகராஜன் கேள்வி

கோலாலம்பூர், பிப்.7-
மலேசிய இந்திய சமூக பொருளாதார உருமாற்றத் திட்டத்திற்காக மித்ராவுக்கு வழங்கப்பட்ட அரசாங்க மானியங்கள் குறித்து முழுமையான விளக்க அறிக்கைகள் இந்திய சமுதாயத்தின் முன்வைக்கப்பட வேண்டும்.அரசாங்கம் வழங்கிய கோடிக்கணக்கான வெள்ளி யார் யாருக்கு வழங்கப்பட்டன, எந்த அடிப்படையில் வழங்கப்பட்டன போன்ற விபரங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவரும் அரிமா எனப்படும் மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார்.


நாடு சுதந்திரமடைந்து 65 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, இந்திய சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் கானல் நீராகவே இருக்கிறது.
நாட்டின் 6ஆவது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தலைமைத்துவத்தில் செடிக் எனும் பொருளாதார வளர்ச்சித் திட்டம் அமைக்கப்பட்டது.

2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மானியங்கள் வழங்கப்பட்டு வந்த காலகட்டத்தில்தான் டத்தோஸ்ரீ நஜிப், இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நிதி தேவை குறித்து ஆலோசிக்கப்பட்டு, அவை முறையாகச் சேரவேண்டும் என்பதற்காக தமிழ்ப்பள்ளித் திட்ட மேம்பாட்டு வரைவுக்கு இயக்குநராக இருந்த பேராசிரியர் முனைவர் டத்தோ என்.எஸ்.ராஜேந்திரனை செடிக்கின் தலைமை இயக்குநராக நியமனம் செய்தார்.
அதன்பின் 2018இல் அவர் செடிக் அமைப்பிலிருந்து விலகும் வரை முறையாக எல்லாம் செயல்படத் தொடங்கின. மானியங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.


அதன் பிறகு பக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர் அமைச்சராக வந்த பி.வேதமூர்த்தி மித்ராவுக்கு தலைமையேற்றார். அதன் பின் அதை நிர்வகிக்கும் பொறுப்பை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கிய பின்னர் மித்ரா பணம் திசை மாறிச் சென்றதை யாரும் மறந்துவிட முடியாது.மித்ராவுக்கு லட்சுமணன், அதன் பிறகு மகாலிங்கம், அதன் பின்னர் ரவீந்திர நாயர் இப்படி மாறி, மாறி வந்த பின்னரும்கூட மித்ராவுக்கான அரசாங்கத்தின் பணம் ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது.


இன்றுவரை மர்மதேசமாகக் காட்சியளிக்கும் மித்ராவின் பணத்திற்கு யார்தான் பதில் சொல்வார்கள். கணக்குகள் சரியாக இருக்கின்றனவா என்றுகூடத் தெரியாத அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது.மித்ராவுக்கு 2021இல் வழங்கப்பட்ட 73 விழுக்காடு மானியம் பயன்படுத்தப்பட்டு விட்டது. 2020இல் 63 விழுக்காடும் 2019இல் 58 விழுக்காடும் 2017இல் 57 விழுக்காடும் 2016இல் 35 விழுக்காடும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.அப்படி பயன்படுத்திய பணம் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற விபரத்தை வெளியிட வேண்டும். நேர்மையாக மித்ரா நிதி வழங்கப்பட்டதாகக் கூறுவது உண்மையானால் பட்டியலை வெளியிட வேண்டும்.
எந்தெந்தத் திட்டங்களுக்கு எந்தெந்த அமைப்புகளுக்கு இந்நிதி வழங்கப்பட்டன என்பதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.


அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு வழங்கிய நிதியை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், செலவழிக்கலாம் என்று கூறுவார்களேயானால், அது மிகப் பெரிய தவறாகும்.மித்ரா நிதி குறித்து தேசிய கணக்காய்வு நிறுவனம் விசாரணை செய்து வந்தாலும்கூட, சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் இதற்கு முழு விளக்கமளிக்க வேண்டும்.இந்தியர்களுக்கும் இந்திய சமூகம் சார்ந்த அமைப்புகளுக்கும் தொழில் நடத்தும் இயக்கங்களுக்கும் மித்ரா நிதி பயன்பட வேண்டும். அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் தார்மீகக் கொள்கையாக இருந்து வந்தது.


ஆனால் இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட வேண்டிய நிதி ஏன் 72 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேவை மையங்களுக்கு வழங்கப்பட்டன என்பதையும் விளக்க வேண்டும்.அந்த 72 நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்? இந்தியர்களில் எத்தனை பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள்? அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்கத் தயாராக இருக்கின்றார்களா?
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சேவை மையத்திற்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது? இந்த நிதி மூலம் எத்தனை இந்தியர்கள் பயன்பெற்றனர்? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை இந்திய சமுதாயம் கேட்கிறது.


உண்மையிலேயே இந்தப் பணம் சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்றடைந்ததா அல்லது சொந்த பாக்கெட்டுக்குள் சென்றதா என்பதை சமுதாயம் தெரிந்து கொள்ள விரும்புகிறது.10 வெள்ளி எடுத்தாலும் 10,000 வெள்ளி எடுத்தாலும் திருட்டு திருட்டுதான்.எனவே இந்த மித்ரா நிதி குறித்து எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஒரு விரிவான விசாரணையை நடத்த வேண்டும். காரணம் இது தனிப்பட்ட ஒருவரின் பணமல்ல. அரசாங்கத்தின் பணம். அதுவும் மக்கள் வரி செலுத்துகின்ற பணமாகும்.


எம்ஏசிசி இந்த விவகாரத்தில் முனைப்புக் காட்ட வேண்டும். தேசிய முன்னணி ஆட்சியாக இருந்தாலும் சரி, பக்காத்தான் ஆட்சியாக இருந்தாலும் சரி விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.அதேவேளையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியது போன்று ஒரு தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.உண்மை வெளிச்சத்திற்கு வந்தால்தான் மக்களுக்கு எல்லாம் தெரியவரும் என்று ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.