ஹன்னாவுக்கு எதிரான அவதூறு வழக்கு மீட்பு

கோலாலம்பூர், பிப். 7-
சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோவுக்கு எதிராக தாம் தொடுத்திருந்த அவதூறு வழக்கை மலேசியா உத்தாரா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கமாருல் ஸமான் யூசோப் மீட்டுக் கொண்டுள்ளார்.
இன, சமய உணர்வுகளைத் தூண்டிவிடுவதாக தம்மைப் பற்றி ஹன்னா அவதூறாகப் பேசியதாகக் கூறி அவர் மீது கமாருல் வழக்குத் தொடுத்திருந்தார்.
அந்த வழக்கைத் தொடர்வதில்லை எனத் தெரிவிக்கும் நோட்டீஸ் ஒன்றை ஜனவரி 30ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் கமாருல் தாக்கல் செய்தார் என்று ஹன்னா இயோ நேற்று தெரிவித்தார்.


கமாருல் தமக்கு செலவுத்தொகையாக ஐயாயிரம் வெள்ளியை வழங்குவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளார். மீண்டும் வழக்குத் தொடுக்கப் போவதில்லை என்றும் உறுதியளித்துள்ளார் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஹன்னா இயோ சொன்னார்.கமாருல் தமது அவதூறு வழக்கை தக்க நேரத்தில் மீட்டுக் கொண்டுள்ளார். அது தவிர, தேர்தல் பிரச்சாரத்தின்போது இனத்தையோ சமயத்தையோ தவறாகப் பயன்படுத்தமாட்டேன் எனும்
என்னுடைய திடமான நிலைப்பாடும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை, ஆதாரமற்றவை என்பதையும் இது புலப்படுத்தியிருக்கிறது என்று ஹன்னா இயோ தெரிவித்தார்.
தற்போது அவ்வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டு விட்டதால், இத்துடன் இந்த விவகாரத்தைக் கைவிடுகிறேன் என்றார் அவர்.


கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சபா சட்டமன்றத் தேர்தல் பிரச்சார நேரத்தில் ஹன்னா இயோவின் படம் பொறிக்கப்பட்டிருந்த ஒரு பதாகை வைக்கப்பட்டிருந்தது, அந்த பதாகையில் “தேசிய நிர்மாணத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு” எனும் வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.அது பற்றி கருத்துரைத்திருந்த கமாருல், “மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு சமயத்தைப் பயன்படுத்துவதா?” என்று
குறிப்பிட்டிருந்தார்.


இதற்குப் பதிலளித்த ஹன்னா இயோ, அந்த விரிவுரையாளர் இன, சமய உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தம்மீது அபாண்டமாக குற்றம் சுமத்தியிருக்கும் ஹன்னா இயோ அதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கமாருல் வலியுறுத்தியிருந்தார். ஆனால், அதற்கு ஹன்னா இயோ மறுப்புத் தெரிவித்ததால் அவர்மீது கமாருல் வழக்குத் தொடர்ந்தார்.