தமிழ் அறவாரியத்தின் உலகத் தாய்மொழி நாள்
ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுக்க பிப்ரவரி 21 ஆம் நாள் உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21 கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு தமிழ் அறவாரியத்தின் தலைமையில் மலேசிய இக்ராம் அமைப்பு (IKRAM), LLG எனப்படும் மலேசியக் கலாச்சார மேம்பாட்டு மையம், மலேசியன் நேட்டிவ் நெட்வொர்க் (JOAS), மலேசியச் சீனப் பள்ளிகள் மேலாண்மை வாரியக் கூட்டமைப்பு (DONG ZONG), KLSCAH எனப்படும் கோலாலம்பூர் சிலாங்கூர் சீனப் பல்நோக்கு மண்டபம், மலேசியச் சீனப்பள்ளி ஆசிரியர் சங்கம் என மலேசியாவில் 8 மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகப் பொது இயக்கங்களுடன் இணைந்து உலகத் தாய்மொழி நாள் நிகழ்ச்சி நடத்தவிருப்பதாகத் தமிழ் அறவாரியத்தின் தலைவர் வே.இளஞ்செழியன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
இவ்வாண்டுக் கல்வி அமைச்சின் DEWAN BAHASA DAN PUSTAKA எனப்படும் தேசிய மொழிக் காப்பகத்தின் ஆதரவுடன் 5 மொழியியல் முதன்மை இயக்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் பிப்ரவரி 21 டேவான் புஸ்தாக்கா கோலாலம்பூர் அரங்கத்தில் காலை 9மணி முதல் நண்பகல் 2மணி வரையில் நடைபெறவிருப்பதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு.குகனேஸ்வரன் தெரிவித்தார்.
அனைத்துலக நாடுகளின் கூட்டமைப்பான யுனேஸ்கோ 2023 ஆம் ஆண்டுக்கான உலகத் தாய்மொழி நாள் கருப்பொருளாகப் “பன்மொழிக் கல்வி, கல்வி உருமாற்றத்திற்கு இன்றியமையாதது” அறிவித்திருக்கும் நிலையில் அக்கருப்பொருளை மையமாகக் கொண்டு கூட்டுப் பேச்சு நடத்தபடவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் தாய்மொழிக் கல்வியின் ஆதரவாளர்களும் கல்வியாளர்களும் பங்கேற்கும் இக்கூட்டுப் பேச்சு அங்கத்தில் பல்வேறு கல்விநிலையில் தாய்மொழியின் பங்களிப்புகள் குறித்து தெளிவாக விவாதிக்கப்படவிருப்பதாகத் தமிழ் அறவாரியம் தெரிவித்துள்ளது.
மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பொதுவுடமை மற்றும் மனிதவளப் பேராசிரியரான முனைவர்.லீ ஹுவான் யீக், அமினுடின் பாகி பயிற்சிக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் முனைவர் குமரன்வேலு இராமசாமி, மலேசியப் பூர்வக்குடியினர் மேம்பாட்டுத் துறையின் உதவித் தலைவர் டத்தோ சுக்கி மீ ஆகியோருடன் மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் துறையின் விரிவுரையாளர் முனைவர் செல்வசோதி இராமலிங்கம் ஆகியோர் கல்வி வளர்ச்சிக்குப் பன்மொழியின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் கூட்டுப் பேச்சில் பங்கேற்க பொதுமக்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்கும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்நிகழ்ச்சி மலாய், ஆங்கிலம், தமிழ், பெங்காலி, சீனம், செமாய், கடாசான், ஈபான் போன்ற மொழிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பயனான நிகழ்ச்சியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்குப் பங்ளாதேஷ் நாட்டின் சிறப்புத் தூதர் முகமட் ஷமீன் ஆசன் பங்கேற்பதாகவும் இந்நிகழ்ச்சி தொடர்பான மேல்விவரங்கள் வேண்டுமெனில் 012 463 4171 எனும் எண்ணில் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் திரு.குகனேஸ்வரன் அவர்களைத் தொடர்புக் கொள்ளும்படி ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.