மித்ராவில் புதிய தலைமை இயக்குநர் நியமனம்!

மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் புதிய தலைமை இயக்குநராக இரவிக்குமார் சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். மித்ராவின் புதிய இலக்குகள் மற்றும் செயல்முறைகள் தொடர்பாக நேற்று ஒற்றுமை துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்களுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மித்ரா தலைமை இயக்குநர் ரவிக்குமார் சுப்பையவுடன் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

இந்தியச் சமூக உருமாற்றுப் பிரிவான மித்ராவின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கும் ரவிக்குமார் சுப்பையா அவர்களின் நியமனமானது, அரசு பொதுச் சேவை ஊழியர் துறையின் நேரடி நியமனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய இந்தியர்களின் அடிப்படை சிக்கல்களைக் கலைத்து மித்ராவின் மூலமாக மேம்பாடுகளைக் கொண்டு வர வேண்டுமெனும் எதிர்ப்பார்ப்பு இந்தியச் சமூகத்திடம் பரவலாக இருக்கும் நிலையில் எந்தவொரு அரசியல் பின்புலம் இல்லாது நியமிக்கப்பட்டுள்ள ரவிக்குமார் சுப்பையா அவர்கள் முறையாக மித்ராவை வழிநடத்துவார் என்றும் நம்பப்படுகிறது.

மித்ரா அரசு அதிகாரிகளுடன் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

முன்னதாக மித்ராவின் தலைமை இயக்குநராக இருந்த இரவிந்திரன் நாயர் தற்போது விடுமுறையில் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் அவர் மற்றொரு அரசுத் துறைக்கு மாற்றப்படலாம் என நம்பப்படுகிறது. பிரதமர் துறையிலிருந்து ஒற்றுமை துறைக்கு மித்ரா மாற்றப்பட்டதிலிருந்து இரவிந்திரன் நாயர் விடுப்பில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

முன்னாள் மித்ரா தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர்

பிரதமர் டத்தோ சிறி அன்வார் அவர்கள் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவர்களை மித்ராவின் சிறப்புக் குழுத் தலைவராக நியமித்திருக்கும் நிலையில் புதிய தலைமை இயக்குநராக ரவிக்குமார் சுப்பையா நியமிக்கப்பட்டிருப்பது இந்தியர்களின் உருமாற்றுப்பிரிவில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, இவ்வாண்டு மித்ராவின் நிதி பங்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும் என நம்பப்படுகிறது.

மித்ரா சிறப்புக் குழுத் தலைவர் ப.பிரபாகரன்