நடுநிலை தவறுகிறதா ?
லாவண்யா ரவிச்சந்திரன்
இஷாந்தினி தமிழரசன்
குறிப்பு: மலாயாப் பல்கலைக்கழக மொழி மொழியியல் புல தமிழ் மாணவர் கழக மாணவர்களால் சுளிக்கச் சொல் அங்கத்தில் இடம்பெற்ற விவாதங்களாகும்.
இன்றைய காலகட்டத்தில் மக்களின் பார்வையும் கருத்து பகிர்வும் தீர ஆராய்ந்த கருத்தாக இருப்பதை விட ஒரு சாராரைத் தாக்கும் கருத்துகளாகவே அமைகின்றன. அவ்வகையில் நாட்டில் ஏற்படும் பல சம்பவங்களில் நடுநிலைமையற்ற கருத்து பகிர்வினால் பல இன்னல்கள் ஏற்படுகின்றன. இடைபட்ட காலத்தில் உள்ள செய்திகளையும் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு சில சிக்கல்களும் ஏற்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் இருக்கும் போது, நாம் கருத்து தெரிவிக்கும் போது ஒரு சாராரை மட்டும் சார்ந்து கருத்து சொல்வது பல சூழ்நிலைகளில் நடுநிலை தவறச் செய்கிறது என்றால் மிகையாகாது. அவ்வகையில் எம்மாதிரியான சூழல்களில் நிலையற்ற கருத்துகள் பகிரப்படுகின்றன எனவும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் கலந்துரையாடப்பட்டன.
பல சம்பவங்களில் தன் கருத்தை சொல்ல முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு என்று நடுநிலைமையில் சிந்திக்காமல் பேசுவதே பல இன்னல்களை உண்டாக்குகிறது. தனிநபர் கருத்தினால், தான் இருக்கும் சாராருக்கு மட்டும் சாதகமாக பேசுவதனால், பிறரின் இடத்திலிருந்து யோசித்து பேசும் தன்மை மறந்து போவதால்தான் நடுநிலை தவறப்படுகிறது. ஒருவரின் கருத்து நடுநிலையில் இருக்க வேண்டும் என்பதில் தெளிவு இருத்தல் அவசியம். தற்போதைய காலத்தில் நாம் கருத்துகளை பொது ஊடகங்களில், கருத்து பதிவு பேட்டியில் சொல்வது மிகவும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இவ்வாறான கருத்துகள் ஒரு சாராரை சார்ந்து மற்றவர்களை தாக்கி பேசும் சூழல் ஏற்படுகிறது.
நடுநிலைமை தனிநபர் சூழலில் மாறுவது குறித்து சமூகத்தையும் தாக்குகிறது. நம்முடைய சூழலிலும் உறவுகள் மத்தியிலும் நடுநிலைமை காக்கப்படுகிறதா? நண்பர்கள், சுற்றத்தார் மத்தியில் அவர்கள் சொல்லிலும் செயலிலும் நடுநிலை இருக்கிறதா? சுற்றி உள்ளவர்கள் தான் சொல்லிலும் செயலிலும் நடுநிலைமையாக இருக்கிறார்களா? ஒரு முறை தவறு செய்தால் அல்லது ஒரு நாள் கூறிய கருத்து மற்றொரு நாள் கூறும் கருத்தோடு ஒத்துப்போகாமல் இருந்தால் அதையும் குறையாக பார்ப்பது தனிநபரிடத்தில் நடுநிலை தவறுகிறது.
மலேசியாவை பொறுத்த வரையில் அண்மையில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் ஒருவர் தப்பு செய்தார் என்பதற்காக அந்த குழுவினரே தவறு செய்தவர்கள் என்று கருத்து சொல்லும் சூழல் இருக்கிறது. அதுவும் குறிப்பாக, ஓர் இனத்தைச் சேர்ந்த நடுவர் செய்யும் தவறினால் அந்த இனமே தவறாகச் செயல்படுகிறது என்பதில் என்ன நியாயம் இருக்கிறது? இந்த நடுநிலைமையற்ற சிந்தனையினால் ஒற்றுமை எங்கே தென்படுகிறது? புரிந்துணர்வை எப்படி நிலைநிறுத்த முடியும்? பிறருக்கு ஏற்படும் பாதிப்பை நினைத்துதான் எல்லோரும் பேசுகிறார்களா என்பது கேள்விக்குறியே?
இனம், மதம் என்று சொல்லும் போது உண்மை நிலவரம் அறிந்து பேசும் நிலை குறைந்துதான் வருகிறது. ஒரு சில பிரச்சினைகள் அல்லது சிக்கல்கள் எழும் போது ஒரு சாரார் பக்கம் மட்டும் இருப்பது எவ்வகையில் முறையாகும்? பல இடங்களில் தனி நபர் சிக்கல் பொதுவாகிவிடும் நிலையில் நியாயம் அநியாயம் என்று இல்லாமல் தன்னை பொறுத்த வரை இது சரி என்று சொல்லும் சூழல் அதிகம் இருப்பது நடுநிலை தவறுகிறது. ஒரு சாராரின் கருத்துகள் தவறாக இருந்தாலும் அவர்களிடத்தில் உள்ள பயம் அல்லது அவர்களினால் ஏற்படும் நன்மை கையில் கிட்டாது என்று யோசிக்கும் நிலைப்பாடு நடுநிலையை தவறச் செய்கிறது. உதவிகள் தேவைப்படும் இடத்தில் நடுநிலை தவறுவது எவ்வகையில் சரி என்று சிந்தனை எங்கே? மற்ற சூழலில் அதே உதவியை பிறர் செய்தால் அங்கே நடுநிலை நிலை நாட்டப்படுமா என்ற கேள்வியும் வருகிறது அல்லவா?
தனக்கு ஒன்று வேண்டும் என்று சொல்லும் நிலையில் நடுநிலை வாழ்கிறதா? நம் உரிமை எனச் சொல்லும் கருத்தில் நடுநிலையுடன் சிந்திக்க தோன்றுகிறதா? அதுவும் குறிப்பாக நாட்டில் சில சிக்கல்கள் வந்தால் அது இந்தக் கட்சியால்தான் வந்தது, இந்த நிர்வாகம்தான் காரணம் என்று எத்தனை நாள் மற்றவற்றைக் கை காட்ட முடியும்? இங்கு மக்கள் நலன் காக்கும் நிலை உருவாகிறதா? இதை தீர்ப்பதற்கு முடிவு தான் பிறக்கிறதா? நடுநிலைமை இல்லை என்றால் பிறருக்கும் அந்த சிந்தனையை புகுத்தி தவறான சிந்தனையை உண்டாக்கும் சூழல் வருகிறது தானே? தனிநபரின் கருத்து சமுதாயத்திடம் தவறாக வந்து சேர்ந்தால் நடுநிலை தவறும் நிலையை கண்கூடாக பார்க்கத் தான் முடிகிறது.
ஒரு சில சூழலில் சிலர் சொல்லும் கருத்துகளினால் இதனை இப்படியும் யோசிக்கலாம் என்று தெளிவு கிடைப்பது பாராட்டத்தக்கதாகும். இதனை இப்படியும் யோசிக்கலாம் என்ற கருத்தும் கிடைக்கிறது. இத்தகைய சூழலில் நாம் கருத்து சொன்னாலும் மற்றவர்கள் சொல்லும் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் பாக்குவமும் வர வேண்டும்.
மதத்தாலும் மொழியாலும் ஒன்று சேர்ந்தாலும் கருத்துகள் வேறுபடத் தான் செய்கிறது. எதார்த்தத்தை மீறி ஒரு சாராரை குறை கூறுவதும் மலேசியாவில்தான் நடக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் அல்லவா?
நவீன காலத்தை நோக்கிப் போகும் வேளையில் நாம் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்ற நிலைப்பாடு அனைவருக்கும் தெரிந்ததுதானே? பொதுவாக இல்லாமல் இது என் நிலைப்பாடு என்ற கருத்து என் வாழ்க்கை என் முடிவு என்று யோசித்தால் இந்த சிக்கல் ஏற்படாது.
கல்வியாலும் அனுபவத்தாலும் சிறந்து விளங்கும் நிலையில் பகுத்தறிவு சிந்தனையுடன் செயல்பட முடியாதா? சுய நலத்தில் நடுநிலைமை எங்கே? எல்லா தரப்பினரிடத்திலும் உள்ள சிந்தனைகளையும் புரிந்து நடப்பது அரிதா? எல்லோரும் என்று சொல்லும் போது குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற கருத்தின் படி செயல்படுதல் நன்மை பயக்குமா என்று கேள்விக்கு ஆம் என்ற பதிலே போதுமானது. உணர்வு சார்ந்து யோசித்தாலும் அறிவற்றலுடன் இருப்பது மனித இயல்பாக மாறுதல் சிறப்பு.
சுய கருத்துகளை நான் சொல்வது தான் சரி என்று தெரிவிக்கும் நிலையில் நடுநிலை தவறுகிறது. சான்றுகளை தனிப்பட்ட நிலையில் தெரிவித்தால் சரி என்றாலும் இனம் அல்லது கட்சி சார்ந்து தெரிவிக்காமல் சொல்வது சாலச் சிறந்தது.
சிந்தனையும் கடந்து வந்த பாதையும் வேறாக இருக்கும் நிலையில் ஒரு மாதிரியான நிலையில் நின்று நடுநிலைமையாக யோசிக்க வேண்டும். என் கருத்துகளை தான் நான் சொல்கிறேன்; அதனால் என்ன? என்ற கேள்வி எழுப்பாமல் அந்தக் கருத்து எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று சிந்தித்து பேச வேண்டும். முடிவும் பேசும் வார்த்தைகளும் சரிவர இருந்தால் தான் அது மற்றவரைப் பாதிக்காது. பாகுபாடின்றி கருதப்படும் வேளையில் தான் முரணான கருத்துகள் அல்லது தவறான சிந்தனைகள் எழாது.
நடப்பதை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும். புரிந்துணர்வில் நடுநிலை முக்கிய இடம் வகிக்கிறது என்பது மறுக்க இயலாத கூற்று. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் நடுநிலையில் கருத்துகளைத் தெரிவிக்கவும் சமூகத்தின் சூழலை மாற்றவும் உதவும்.
அதுபோல தனிநபர் வாழ்க்கையிலும் நடுநிலை இருப்பது பிரிவினையையும் தவிர்க்க உதவுகிறது. எல்லாரிடத்திலும் பல குறைகள் இருந்தாலும் எல்லா சிக்கலிலும் சில மாற்று கருத்துகள் இருந்தாலும்
நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
என்று சிந்திக்கும் சிந்தனை இருப்பின் நடுநிலை தவறாது என்பது வெள்ளிடைமலை.