24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது

(ஆசைதம்பி முனியாண்டி)

மிக நீண்டத் தைப்பூசத் திருவிழாக் கொண்டாட்டத்தின் நேரலை ஒளிபரப்பு மற்றும் ஒரு தனிநபரால் தொகுத்து வழங்கப்பட்ட மிக நீண்டத் தைப்பூசக் கொண்டாட்டத்தின் நேரலை ஒளிபரப்புஎன இரு பிரிவுகளுக்காக ஆஸ்ட்ரோவின் 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. ஜனவரி 24, இரவு 9 மணி முதல் ஜனவரி 25, இரவு 9 மணி வரை ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் ஒளிபரப்பாகிய இந்த முதல் 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்புப், பத்து மலை, ஜார்ஜ்டவுன், ஈப்போ மற்றும் சுங்கை பட்டானி ஆகியவற்றிலுள்ளப் புகழ்பெற்ற உள்ளூர் ஆலயங்களின் நேரலை அறிவிப்புகளைப் பகிர்ந்துக் கொண்ட 19 தொகுப்பாளர்கள் வரிசையை உள்ளடக்கிய முதல் தொடர்ச்சியானத் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பாகும்.

இதுவரை ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பப்பட்ட அனைத்து தைப்பூச நேரலை ஒளிபரப்புகளைக் காட்டிலும் இந்த ஆண்டு தைப்பூச நேரலை ஒளிபரப்பு ரசிகர்களின் எண்ணிக்கையில் கடந்த ஆண்டை விட 192% அதிகரிப்புடன் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. நன்றிகந்தா என்றக் கருப்பொருளில் மலர்ந்த இந்த முதல் 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பைக் குட்டே நிதி வழங்கி ஆதரித்தது.


6 பிப்ரவரி 2024 புக்கிட் ஜாலீலில் உள்ள ஆஸ்ட்ரோ தலைமையகத்தில் நடைப்பெற்ற விருது விழாவின் போது, ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் ஆஸ்ட்ரோ குழுவுடன் இணைந்து, மலேசிய சாதனைப் புத்தகத்தின் அதிகாரியான லீ புய் லெங்கிடம் இருந்து மிக நீண்டத் தைப்பூசத் திருவிழாக் கொண்டாட்டத்தின் நேரலை ஒளிபரப்பு என்றப் பிரிவிற்கான நற்சான்றிதழைப் பெற்றார். ஒரு தனிநபரால் தொகுத்து வழங்கப்பட்ட மிக நீண்டத் தைப்பூசக் கொண்டாட்டத்தின் நேரலை ஒளிபரப்பு என்றப் பிரிவிற்கான நற்சான்றிதழை தொகுப்பாளர்களில் ஒருவரான மீனா குமாரி பெற்றார்.