எஃபிஐ பயங்கரவாதிகள் பட்டியலில் மூன்று மலேசியர்கள்

புத்ராஜெயா, பிப். 20-
அமெரிக்காவின் கூட்டரசு புலனாய்வுத்துறையின் பயங்கரவாதிகள் கண்காணிப்பு மையத்தின் பெயர்ப் பட்டியலில் மூன்று மலேசியர்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இது பற்றி அந்தப் புலனாய்வு அமைப்பிடமிருந்து கூடுதல் விளக்கம் கோரப்படும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நேற்று தெரிவித்தார்.


அந்த மூன்று நபர்கள் பற்றிய விவரங்களை எஃபிஐ கோரியிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். ஆனால், என்ன காரணங்களால் அவர்கள் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து தெளிவான விளக்கம் பெறுவதற்காக இரண்டு நாள்களுக்கு முன்பு தேசியப் போலீஸ்படைத் தலைவர் (ஐஜிபி) ரஸாருடின் உசேனைத் தொடர்பு கொண்டேன். அந்த மூன்று நபர்கள் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கும்படி எஃபிஐ கோரிக்கை விடுத்திருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.


ஆயினும், மேல்விவரங்களை வழங்குவதற்கு முன்பு அது பற்றிய ஒரு தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது. அரைகுறையான தகவல்களைக் கொடுக்க விரும்பவில்லை என்று புத்ராஜெயாவில் ஷாஃப்ட்ஸ்பரி கட்டடத்தில் கடப்பிதழ் அலுவலகத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
மலேசியாவில் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த மூன்று தலைவர்கள் அமெரிக்காவின் எஃபிஐ பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கடந்த சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டிருந்தது.


அமான் பாலஸ்தீன் பெர்ஹாட்டைச் சேர்ந்த அவாங் சுஃபியான் அவாங் பியூட், பெர்சத்துவான் சிந்தா சிரியா அமைப்பைச் சேர்ந்த அமாட் மூசா அல், டூனியா மெலாயு டுனியா இஸ்லாம் ( டிம்டிஐ) அமைப்பைச் சேர்ந்த டத்தோ அபு பாக்கார் அப்துல் ஆகியோரே அம்மூவரும் ஆவார்.


டிம்டிஐ அமைப்பில் தாம் தலைமைச் செயலாளராக முன்பு பதவி வகித்து வந்ததை அபு பாக்கார் உறுதிப்படுத்தினார். ஆனால், எஃபிஐ புலனாய்வுத்துறையின் பயங்கரவாதிகள் பட்டியலில் தாம் சேர்க்கப்பட்டுள்ள விவகாரம் குறித்தோ என்ன காரணத்தினால் அதில் சேர்க்கப்பட்டுள்ளேன் என்பது குறித்தோ தமக்கு™ தெரியாது என்று அவர் குறிப்பிட்டார்.


காஸாவில் போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவிப் பொருள்களை விநியோகம் செய்துவரும் “ஓப்ஸ் ஏசான்” அமைப்புக்கு இம்மாதம் 15ஆம் தேதியன்று உள்துறை அமைச்சு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட அம்மூவரும் அந்த அமைப்பில் இடம்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தக்கோரி அதன் தலைவர் ஜிஸ்மி ஜொகாரியை அக்கடிதம் வலியுறுத்தியிருந்தது. “ஓப்ஸ் ஏசான்” அமைப்பின் நடவடிக்கைகளில் சிறு அளவில் மட்டுமே அவர்கள் பங்காற்றி வந்தனர் என்று ஜிஸ்மி விளக்கியிருந்தார்.