மகாதீர் சுயநினைவுடனேதான் இருக்கின்றார்
கோலாலம்பூர், பிப். 20 –
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது சுயநினைவுடனேதான் இருப்பதாகவும் ஆபத்தான நிலையில் இல்லையென்றும், அவருக்கு நெருக்கமான வட்டாரம் ஒன்று நேற்று கூறியது.
நாட்டில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர், ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று, தமது பெயரை தெரிவிக்க மறுத்துவிட்ட அந்த வட்டாரம் கூறியது.
ஓர் இருதய நோயாளியான மகாதீர், கிருமி தொற்றுக்குச் சிகிச்சை பெறுவதற்காக, கடந்த ஜனவரி 26-ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள தேசிய இருதயக் கழகத்தில் (ஐஜேஎன்) அனுமதிக்கப்பட்டார்.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடிக்கு எதிரான தமது அவதூறு வழக்கு விசாரணையின்போது, மகாதீர் ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அம்பலமானது.
தமது கட்சிக்காரர் மகாதீர் ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், வழக்கு விசாரணையை வேறொரு நாளுக்கு ஒத்தி வைக்குமாறு கோரி, மகாதீரின் வழக்கறிஞர் மியோர் நோர் ஹைடிர் சுஹைமி அன்றைய தினம் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.