தாய்மொழிப் பள்ளிகள் சட்டப்பூர்வமானவை கூட்டரசு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

புத்ராஜெயா, பிப். 21-
தமிழ், மாண்டரினை போதனா மொழிகளாகப் பயன்படுத்தப்படுவதையும் தாய்மொழிப் பள்ளிகளின் சட்டப்பூர்வத்தன்மையையும் எதிர்த்து அரசு சார்பற்ற இரண்டு அமைப்புகள் இனியும் தங்களின் சீராய்வு மனுவைத் தொடர முடியாது என்று கூட்டரசு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தங்களின் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றத்தில் தொடர அனுமதிகோரி அவ்விரு அமைப்புகளும் சமர்ப்பித்திருந்த விண்ணப்பமொன்றை டத்தோ மேரி லிம் தியாம் சுவான் தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு 2-1 எனும் பெரும்பான்மையில் தள்ளுபடி செய்தது.
இஸ்லாமியக் கல்வி மேம்பாட்டு மன்றம் (மாப்பிம்) மற்றும் மலேசிய எழுத்தாளர்கள் சங்க சம்மேளனம் (கபேனா) ஆகியவையே அவ்விரு அமைப்புகளும் ஆகும்.
நீதிமன்றப் பரிபாலனச் சட்டத்தின் 96ஆவது விதிக்கு ஏற்புடையதாக விண்ணப்பதாரர்களின் கோரிக்கை அமையவில்லை என்று மேரி லிம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.


தங்களின் மேல்முறையீட்டை செவிமடுக்க எதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என்பதை கூட்டரசு நீதிமன்றத்திடம் எடுத்துரைப்பதில் விண்ணப்பதாரர்கள் தோல்வி கண்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாய்மொழிப் பள்ளிகளில் போதனா மொழியாக தமிழும் மாண்டரினும் பயன்படுத்துவது சட்டப்பூர்வமானதுதான் என்று அப்பீல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவ்விரு விண்ணப்பதாரர்களும் முயற்சி மேற்கொண்டனர்.


மூவரடங்கிய நேற்றைய அமர்வில் டத்தோ ரோட்ஸாரியா பூஜாங் மற்றும் டத்தோ அப்துல் கரீம் அப்துல் ஜாலில் ஆகிய நீதிபதிகளும் இடம்பெற்றிருந்தனர்.
பள்ளிகள் சட்டப்பூர்வமானவையோ பொதுத்துறைகளோ அல்ல. பள்ளிகளில் மாண்டரின் (சீனம்) மற்றும் தமிழ் போன்ற மொழிகள் பயன்படுத்தும் நடவடிக்கை, அரசமைப்புச் சட்டம் பிரகடனம் செய்யப்படுவதற்கும் அது நடப்பில் வருவதற்கும் முன்பிருந்தே செயல்பாட்டில் உள்ளது என்று கடந்தாண்டு நவம்பர் 23ஆம் தேதியன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தலைமையேற்றிருந்த டத்தோ சுப்பாங் லியாங் தீர்ப்பளித்திருந்தார்.


கல்விக் கொள்கையின் விளைவுகள், அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அக்கொள்கைகளின் அமலாக்கப்படும் விதம் ஆகியவை சம்பந்தப்பட்டதாகும் என்றும் சுப்பாங் குறிப்பிட்டிருந்தார்.
தேசிய வகை பள்ளிகளில் தமிழ் மற்றும் சீன மொழிகளின் பயன்பாடு போதனா மொழியாக கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின் 152(1)(பி) ஆவது விதியின்கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாட்டில் இதர சமூகங்களின் மொழிகள் பயன்படுத்துவதற்கும் படிப்பதற்கும் அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என்று அச்சட்டவிதி வலியுறுத்துகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
மாப்பிம், கபேனா, இஸ்மா, ஐ-குரு ஆகிய நான்கு மலாய் அமைப்புகள் கொண்டு வந்த அவ்வழக்கை அப்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமது நஸ்லான் முகமது கஸாலி கடந்த 2021ஆம் ஆண்டு நிராகரித்தார்.


தாய்மொழிப்பள்ளிகள் கூட்டரசு அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை என்று அறிவிக்கக்கோரி கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் அந்த அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன. அவ்வழக்கு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்மா மற்றும் ஐ-குரு அமைப்புகள் அதிலிருந்து விலகிக் கொண்டன.
பல சீன, தமிழ் அமைப்புகள், அரசாங்கம், நான்கு அரசியல் கட்சிகள் ஆகியவை பிரதிவாதிகளாக அவ்வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.