153ஆவது சட்டவிதி மறுஆய்வு செய்யப்படாது அன்வார் திட்டவட்டம்

கோலாலம்பூர், பிப். 21-
பூமிபுத்ராக்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்க வகை செய்யும் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின் 153ஆவது விதியை அரசாங்கம் மறுஆய்வு செய்யாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.
153ஆவது சட்டவிதி உள்பட ஒட்டுமொத்த கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தையே நாங்கள் தற்காப்போம். அது பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பேங்க் நெகராவில் அனைத்துலக இஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி மீதான கருத்தரங்கொன்றைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அன்வார் தெரிவித்தார்.


பூமிபுத்ராக்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்குதற்கு வகை செய்யும் 153ஆவது சட்டவிதி பூமிபுத்ராக்களுக்கு பலனளித்துள்ளாகத் தெரியவில்லை என்பதால் அச்சட்டவிதியை மறுஆய்வு செய்யும்படி பிகேஆர் கட்சியின் பாசிர் கூடாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
பூமிபுத்ரா சமூகத்தின் மேல்தட்டைச் சேர்ந்த சிலர் அச்சட்டவிதியை தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மலாய்க்காரர்கள் மற்றும் சபா, சரவாக்கின் சுதேசிகளின் சிறப்புநிலையைப் பாதுகாப்பது மாட்சிமை தங்கிய மாமன்னரின் பொறுப்பாகும் என்று அச்சட்டவிதி வலியுறுத்துகிறது.


அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பூமிபுத்ரா பொருளாதார காங்கிரஸ் மாநாட்டில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் ஹசான் வலியுறுத்தியிருந்தார்.
இதுவொரு உணர்ச்சிகரமான பிரச்சினை என்பதை ஒப்புக் கொண்ட அவர், பூமிபுத்ராக்களுக்கு உதவ வேண்டிய கொள்கைகளால் அவர்கள் உண்மையிலேயே பலனடைந்துள்ளார்களா என்பதைத் தீர்மானிப்பதற்கு ஒளிவுமறைவற்ற வகையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றார்.


பூமிபுத்ரா காங்கிரஸ் மாநாட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த அவர், அதற்குப் பதில் பொருளாதாரத்தில் பின்னடைந்துள்ள மக்களை மையமாகக் கொண்ட மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பூமிபுத்ரா பொருளாதார மாநாடு இம்மாதம் 29ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாடு அனைத்து இனங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டிருந்தார்.