3 இலட்சம் இந்து ஆலயங்களா? பொய்யுரைக்க வேண்டாம்
கோலாலம்பூர், பிப். 21-
இனம்-சமயம்-மொழி-பண்பாட்டுக் கூறுகளால் நல்லிணக்கத்துடன் வாழும் மலேசிய கூட்டு சமுதாயத்தில் அவ்வப்பொழுது சலசலப்பையும் பூசலையும் தோற்றுவிக்க ஒருவர் மாறி ஒருவர் என வந்துபோகின்றனர். அந்த வரிசையில் புதிதாக சேர்ந்துள்ள மத வெறுப்பு பிரசகர் முகமட் ரித்துவான் தீ, மலேசிய ஒற்றுமை சமுதாயத்தில் தீ மூட்டப் பார்க்கிறார் என்று மலேசிய இந்து சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள இந்து வழிபாட்டு தலங்கள் குறித்த தரவும் பதிவும் எங்களிடம் ஆதாரப்பூர்வமாக உள்ள நிலையில், மூன்று லட்ச இந்துக் கோயில்கள் நாட்டில் இருப்பதாகவும் இது, நாட்டில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லாமல் அதிக அளவில் இருப்பதாகவும் பொய்க் கணக்கையும் பொருந்தா கருத்தையும் ரித்துவான் தீ கூறியிருப்பதாக இந்து சங்க தேசியத் தலைவர் தங்க. கணேசன் தெரிவித்தார்.
ஒரு சமயத்தை வழிவழியாகப் பின்பற்றி வருபவர்கள், பொதுவாக மற்ற சமயத்தினரை மதிக்கும் பண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். திடீரென இடையில் மதம் மாறிய ரித்துவான் தீ போன்ற ஒரு சில பேர்வழிகளால் தான் இதுபோன்ற தீயக் கருத்துகளைக் கூற முடியும்.
இவர், தான் தெரிவித்தபடி மூன்று லட்ச இந்துக் கோயில்களுக்கான ஆதாரத்தைப் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும். இல்லாவிடில் இவர்மீது வழக்கு தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள தங்க கணேசன், மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை சார்பில் மீண்டும் கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.