மாமன்னரின் அறிவுரையை ஏற்பீர் மக்களவை மாண்பை மதிப்பீர்-ஓம்ஸ் பா.தியாகராஜன் அறிவுறுத்தல்
கோலாலம்பூர், பிப். 28-
மலேசிய அரசியலில் என்றும் காணாத அளவுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னரின் உரை வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாக அமைந்திருப்பது போற்றுதலுக்குரியதாகும்.
மாமன்னர் வழங்கிய அந்த பேருரை நாடாளுமன்ற, மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை மட்டுமல்லாது சாட்டையடியாகவும் அமைந்துள்ளதாக ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தை சிறுமைப்படுத்தவும் கவிழ்க்கவும் முனைப்புக் காட்டி வந்த எதிர்க்கட்சிகளின் செயலுக்கு சம்மட்டியடியாக இருந்தது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தங்கள் அரசியல் லாபத்திற்காக அவமரியாதைக்குரிய வார்த்தைகளை அள்ளிவீசி நாடாளுமன்ற மாண்பைச் சீரழிக்கிறார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தையே கொண்டிருப்பது மாமன்னரை வெறுப்புக்கு ஆளாக்கியுள்ளது என்பதை அவரது உரையின் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்.
இன்று மக்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்வு எதைநோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று தெரியாமல் கண்ணீரும் கம்பலையுமாய் இருந்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். நாள்தோறும் இந்த அவலங்கள் தொடர்கின்றன. ஆனால் இதுபோன்ற பிரச்சினைகளைப் பேசுவதற்கு எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் முன்வரவில்லை.
இதன் காரணமாகவே மாமன்னரின் அந்த வரலாற்றுப்பூர்வமான பேச்சு அமைந்திருந்தது. அது மட்டுமல்லாது, திமிர்த்தனம் காட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களை 14 நாள்களுக்கு இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு மாமன்னர் பச்சைக்கொடி காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. நாட்டு மக்களும் இதனை வரவேற்கிறார்கள்.
மலேசிய நாடாளுமன்றத்தின் மாண்பு என்பது முதல் பிரதமர் தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மானின் பண்பாட்டுத் தொடக்கத்தில் இருந்து நடந்து வருபவையாகும்.
நாடாளுமன்றத்தில் ஓர் இனத்தைப் பற்றியும் மதங்களைப் பற்றியும் தனி மனித சாடல்களும் இருக்கக்கூடாது. ஆனால் சமீபகாலத்தில் அதுவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்கள் நாடாளுமன்ற மாண்பை சீர்குலைக்கவே செய்கின்றன.
எனவே அடுத்த 16ஆவது பொதுத் தேர்தல் வரும்வரை அரசாங்கத்தை சீர்குலைக்கக் கூடாது என்ற மாமன்னரின் அறிவுரையை அனைவரும் ஏற்க வேண்டும் என்று அரிமா எனப்படும் மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவருமான ஓம்ஸ் தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.