செர்டாங் மாவட்டத்தில் 16 விழுக்காடு குற்றச்செயல்கள் குறைக்கப்பட்டுள்ளன

  • ஏசிபி அன்பழகன் தகவல்

இரா.கோபி


செர்டாங், பிப்.29-
ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் காவல் துறையினரின் சந்திப்புக் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் செர்டாங் மாவட்ட போலீசாரின் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்புக் கூட்டம் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏஏ அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்புரையாற்றிய அவர் கூறுகையில், செர்டாங் மாவட்டத்தில் 16 விழுக்காடு குற்றச்செயல்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அதற்கு செர்டாங் மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் சேவை தான் காரணம் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை 125 குற்றச்செயல்கள் நிகழ்ந்துள்ளன.


2024ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 25ஆம் தேதி வரை 104 குற்றச்செயல்கள் நிகழ்ந்துள்ளன.இதில் 16.80 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கார் திருட்டு, லோரி திருட்டு, வழிப்பறிக் கொள்ளை, வீடு புகுந்து கொள்ளை போன்ற சம்பவங்களாகும்.


மேலும், நடந்து முடிந்த சீனப்புத்தாண்டை முன்னிட்டு ஓப்ஸ் செலாமாட் 21-இல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3.1 விழுக்காடு விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன.
செர்டாங் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தமது சேவையில் கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றனர். அந்த வகையில், சிறந்த சேவையாற்றியவர்களுக்கும், குற்றச்செயல்களைச் முறியடித்தவர்களுக்கும் 41 போலீஸ் அதிகாரிகளுக்கும் சிறப்பு சான்றிதழும் பாராட்டும் வழங்கினார் ஏசிபி அன்பழகன்.
செர்டாங் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் எந்த நேரத்திலும் பொதுமக்களுக்கு தமது சேவைகளை உடனுக்குடன் வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.


அதே சமயம், போலீஸ் அதிகாரிகள் தமது கடமையை செய்யத் தவறினால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
செர்டாங் மாவட்ட காவல்துறையின் சேவைகள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் தமிழ் மலர் நாளிதழுக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்ட அவர் காவல்துறையினரின் செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டதற்காக தமிழ் மலர் நிருபர் இரா.கோபி பாராட்டும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.