சமூக ஊடகத் தள நிறுவனங்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை ஏற்றுக் கொள்வதில்லை

கோலாலம்பூர், பிப். 29-
சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு சமூக ஊடகத் தள வழங்குநர்கள் தங்களின் சுய மதிப்பீட்டை பயன்படுத்துகின்றனர். இதில், சம்பந்தப்பட உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு அரசாங்கத்திடமிருந்து வரும் எந்த அறிவுறுத்தல்களையும் இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்று தொடர்பு, பல்லூடகத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
நடப்பில், சமூக ஊடகங்களில் இருக்கும் உள்ளடக்கம் தொடர்பான அறிக்கைகளை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) முகநூல், டிக்டோக், எக்ஸ் போன்ற சமூகத் ஊடகத் தள வழங்குநர்களிடம் அதன் கோரிக்கையை சமர்ப்பிக்கிறது.


இருப்பினும், குறிப்பிட்ட அந்த கோரிக்கையைக் கொண்ட உள்ளடக்கத்தை அகற்றும் நடவடிக்கையை எடுக்கும் முடிவு சமூக ஊடகத் தள வழங்குநர்களின் சுய வழிகாட்டுதலைப் பொறுத்தது.
“அவர்கள் (சமூக ஊடகத் தள வழங்குநர்கள்) எம்.சி.எம்.சி அரசாங்கத்தின் கருத்துக்களுடன் உடன்படுகிறார்களா இல்லையா என்பது அவர்களின் சொந்த முடிவாகும்.”


“சமூக வலைத்தளங்களில் இருக்கும் குறிப்பிட்ட பதிவு அகற்றப்பட்டால், அது அரசாங்கத்தின் மதிப்பீடு, முடிவு மற்றும் கோரிக்கையுடன் உடன்படுகிறது என்று அர்த்தம். சில சமயம், அரசாங்கத்தின் சில கோரிக்கைகளும் அவர்களால் நிராகரிக்கப்படுகின்றன,” என்று மக்களவையில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையது சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ இவ்வாறு பதிலளித்தார்.
முன்னதாக, மக்களின் விமர்சனத்திற்கு பயந்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்படும் உள்ளடக்கங்களை அரசாங்கம் அகற்றுவதாகக் கூறி அக்குற்றச்சாட்டை சையத் சாதிக் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.