2022ஆம் ஆண்டில் 54 % மருத்துவ அதிகாரிகள் பொதுச்சேவைத்துறையிலிருந்து விலகினர்

கோலாலம்பூர், பிப். 29-
நாட்டின் 100,696 மருத்துவ அதிகாரிகளில் 54 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் கடந்தாண்டில் பொதுச்சேவைத்துறையிலிருந்து விலகியுள்ளனர். தனியார்துறையில் சேர்ந்து பணியாற்றுவதற்காக அவர்கள் அங்கிருந்து விலகியுள்ளனர் என்று மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.


பக்காத்தான் ஹராப்பானின் புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபோங் கூய் லுன் கேட்ட துணைக்கேள்வியொன்றுக்குப் பதிலளித்தபோது சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸூல்கிப்ளி அமாட் இதனைத் தெரிவித்தார்.
பொதுச்சேவைத்துறையிலிருந்து விலகிய மருத்துவர்களில் 45 விழுக்காட்டினர் தற்போது வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு நடத்திய ஆய்வொன்றிலிருந்து தெரிய வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சொந்த காரணங்களின் அடிப்படையில் வேலையை விட்டு விலகிய 28 விழுக்காட்டினரில் ஆறு விழுக்காட்டினருக்கு பொதுப்பல்கலைக்கழகங்களில் வேலை செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 2.7 விழுக்காட்டினர் மேல்படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர். மேலும், 0.8 விழுக்காட்டினர் சொந்த கிளினிக்குகளை திறந்துள்ளனர். இதர 0.5 விழுக்காட்டினர் எந்த காரணங்களையும் கூறவில்லை என்று டாக்டர் ஸூல்கிப்ளி சொன்னார்.


பொதுச்சேவைத்துறையிலிருந்து மருத்துவ அதிகாரிகள் விலகுவதற்கு என்ன காரணம் என்பதைத் தாம் அறிய விரும்புவதாக கேள்விநேரத்தின்போது ஃபோங் கேட்டிருந்தார்.

பொதுச்சேவைத்துறையில் மருத்துவ அதிகாரிகளை நிலைத்திருக்க வைப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது.கிரேட் யூடி41 பிரிவைச் சேர்ந்த ஒப்பந்த அதிகாரிகளின் தொடக்கச் சம்பளத்தை 5,197 வெள்ளியாக உயர்த்தியிருப்பதும் அந்நடவடிக்கைகளில் அடங்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
2019ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையில் 9,822 மருத்துவ அதிகாரிகளின் பதவி நிரந்தரமாக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், 2024- 2025 ஆண்டுகளில் மேலும் 6,000 அதிகாரிகளுக்கு பணிநிரந்தரம் அளிக்கப்படும் என்றார்.