2023ஆம் ஆண்டின் இபிஎஃப் லாபஈவு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், பிப். 29-
கடந்தாண்டுக்கான தனது லாபஈவு (டிவிடெண்ட்) விவரங்களை ஊழியர்கள் சேமநிதி வாரியம் ( இபிஎஃப்) ஞாயிற்றுக்கிழமையான மார்ச் 3ஆம் தேதியன்று அறிவிக்கவுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து வழக்கமான சேமிப்பு மற்றும் ஷரியா சேமிப்பு மீதான லாபஈவுத் தொகையை இபிஎஃப் அறிவித்து வருகிறது.
இதனிடையே, அந்த வாரியத்தின் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரி அமாட் ஸூல்கர்னைன் ஒன் வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் லாபஈவுத்தொகை பற்றி அறிவிப்பார்.


கடந்த 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 5.35 விழுக்காடு லாபஈவை விட 2023ஆம் ஆண்டுக்கான லாபஈவு அதிகமாக இருக்கலாம் என்று பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பணவீக்கம், வட்டி விகிதங்கள், புவிஅரசியல் நிகழ்வுகள் போன்றவை 2023ஆம் ஆண்டின் கடைசி காலாண்டுக்கான இபிஎஃப்பின் முதலீட்டு வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று இதர சில நிபுணர்கள் சுட்டிக் காட்டினர்.
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் இபிஎஃப் வாரியத்திற்கு 4,786 கோடி வெள்ளி முதலீட்டு வருமானம் கிடைத்தது. 2022ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் கிடைக்கப்பெற்ற 3,604 கோடி வெள்ளியுடன் ஒப்பிடுகையில் இது 33 விழுக்காடு அதிகமாகும்.


1986ஆம் ஆண்டில்தான் இபிஎஃப் மிக அதிகமாக 8.5 விழுக்காடு லாபஈவை வழங்கியது. மிகக் குறைவாக அது லாபஈவு வழங்கியது 2020ஆம் ஆண்டில் ஆகும். அந்த ஆண்டில் அது 5.2 விழுக்காடு லாபஈவை மட்டுமே அது வழங்கியது.