ஊழல் செய்யும் நபர்களை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றுவேன்

கோலாலம்பூர், மார்ச் 1-
அமைச்சரவையில் இடம்பெறுள்ள எவரும் லஞ்சஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தால், அவரின் பதவி பறிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று எச்சரித்தார்.
நாட்டை ஊழலிலிருந்து மீட்பதற்கு தாம் இவ்வாறு செய்ய வேண்டியிருக்கிறது என்று அவர் சொன்னார்.


லஞ்சஊழல் நடவடிக்கைகளில் அமைச்சர்கள் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும்படி மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) உத்தரவிட்டுள்ளேன் என்றும் அன்வார் கூறினார்.
ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். பிரதமரோ அமைச்சர்களோ ஊழலில் ஈடுபட்டதற்கு திடமான ஆதாரங்கள் இருக்குமானால் அது பற்றி தகவல் தெரிவிக்கும்படி நான் எப்போதுமே கோரிக்கை விடுத்து வந்துள்ளேன்.

அதற்கு ஆதாரம் கிடைத்தால், அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். ஒற்றுமை அரசாங்கம் அமைந்து ஓராண்டு மூன்று மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், இதுவரை எந்தப் புகாரும் கிடைக்கவில்லை. இது ஊழலற்ற அரசாங்கம் எனும் தோற்றத்தை நிலைநிறுத்திவர ஒத்துழைப்பு வழங்கிவரும் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றிகூறுகிறேன் என்று தேசிய லஞ்சஊழல் ஒழிப்பு உச்சநிலை மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது அன்வார் கூறினார்.
லஞ்சஊழலை ஒழிக்கும் பொறுப்பு எம்ஏசிசிக்கு மட்டும் உரித்தானது அல்ல. அது அனைவரின் கடமையும் ஆகும். ஊழல் பற்றி கேள்விப்பட்டால், அது பற்றி புகார் கொடுங்கள். ஆனால், அபாண்டமான குற்றச்சாட்டுகளைக் கூறக்கூடாது. கீழறுப்பு வேலைகளிலும் ஈடுபடக்கூடாது என்றார் அன்வார்.