தமிழ் மலர் செய்தி எதிரொலி

லாவண்யா ரவிச்சந்திரன்
கிள்ளான், மார்ச்.1-
கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கணினி வகுப்புகள் திடீரென நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பெற்றோர்கள் சிறப்புக் குழு அமைத்து இப்பிரச்சினையைத் தீர்க்க முடிவெடுத்தனர்.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் நடைபெற்ற வேளையில், இது குறித்து தமிழ்மலர் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் இதன் எதிரொலியாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் அப்பள்ளியில் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங்கின் சிறப்பு அதிகாரி சுரேஷ் சிங் தமிழ் மலர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சிலாங்கூர் மாவட்ட கல்வித்துறையின் இயக்குநரின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் வழிகாட்ட அனைத்து தரப்பினருடன் சேர்ந்து, முன்னர் இருந்த குறைகள் களையப்பட்டு, புதிய முறையில் கணினி வகுப்புகளை செயல்படுத்த முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட திட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏதேனும் உத்தரவுகள் சுற்றறிக்கைகளுக்குபள்ளி கண்டிப்பாக இணங்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் வலியுறுத்தியுள்ளார்.

பெற்றோர், பாதுகாவலர்களின் அதிருப்தியைத் தவிர்க்க, எந்தவொரு முடிவையும் முதலில் ஆலோசிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அதோடு, பள்ளியில் கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கணினி வகுப்பு தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இச்செய்தியின் எதிரொலியாக கிள்ளான், சிம்பாங் லீமா, தமிழ்ப்பள்ளிக்கு அமைச்சரின் சிறப்பு அதிகாரி வருகை புரிந்த போது, பள்ளியுடன் இது குறித்து விவாதித்துள்ளார்.

எனவே, இதன் வழி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பிரத்தியேக கணினி வகுப்புகளுக்கு ஒரு சுமுகமான முடிவு கிடைக்கும் என நம்பப்படுகிறது!