இந்துக்களையும் மதத்தையும் இழிவுபடுத்திய வைரமுத்துவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

கோலாலம்பூர், மார்ச் 4-
இந்து மதத்தைச் சார்ந்தவர்களை குறிப்பாக ஆண்டாள், கம்பர், கம்பராமாயணத்தைத் தாக்கிப் பேசியதன் காரணமாக கவிஞர் வைரமுத்துவின் மலேசிய வருகையை இங்குள்ள இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
நேற்று தமிழ் மலரின் முதல் பக்கச் செய்தியில் மஹிமா எனப்படும் மலேசிய இந்து கோயில்களின் அமைப்புச் செயலாளர் பாலகுருநாதனின் அறிக்கை வெளியிடப்பட்டது.


இந்த செய்தியை கண்ணுற்ற நாட்டில் உள்ள இந்து அமைப்புகள், தமிழ் மலரைத் தொடர்பு கொண்டு வைரமுத்து இந்த நாட்டுக்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைத் தடுக்க அரசாங்கமும் உள்துறை அமைச்சும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
தமிழ் நாட்டில் அவர் பேசினாலும், அவை உலகத்தில் உள்ள இந்துக்களையும் மதத்தையும் கேவலப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.
வைரமுத்து போன்றவர்கள் போன்ற எழுத்து விற்பன்னர்கள் இந்து மதத்தைப் பற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றவர்களாகவே கருதப்படுகின்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.


இந்து மதத்தை யார் வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம் என்று நினைப்பவர்களை, மலேசிய இந்துக்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்.
மலேசிய இந்துக்களைப் பொறுத்தவரை எதையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று யாரும் நினைக்கக்கூடாது.
வைரமுத்து இந்து மதத்தை குறிப்பாக ஆண்டாளை அசிங்கப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இங்குள்ள சிலர் கூட வைரமுத்துவுக்கு ஜால்ரா அடிக்கும் வகையில் வாட்ஸ் ஆப் புலனத்தில் தங்கள் மேதாவித் தனத்தைக் காட்டியுள்ளனர்.
வைரமுத்து தமிழ் நாட்டில் பேசியிருக்கிறார். மலேசியாவில் அவருக்கு ஏன் எதிர்ப்பு என்று மெத்தப்படித்த அறிவிலிகள் சர்வ புத்திசாலித்தனமாக மூடத்தனமான கேள்விகளை எழுப்புகின்றனர்.


தமிழ் நாட்டில் இந்துக்களை இழிவுபடுத்தினாலும், உலகத்தில் உள்ள இந்துக்களை இழிவுபடுத்துவதாகவே அர்த்தமாகும்.
ஏற்கெனவே ஒருமுறை வைரமுத்து இங்கு வருகை தருவதற்கு எதிர்ப்புகள் எழுந்தபோது, அவர் திமிராக நடந்து கொண்ட விதம் அனைவரும் அறிந்ததுதான்.
அந்த திமிர்த் தனத்தை தொடர்ந்து அவர் செய்வாரேயானால், இங்குள்ள இந்து அமைப்புகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்று திட்டவட்டமாகக் கூறினர்.
எனவே இந்துக்களை இழிவுபடுத்திய வைரமுத்து, இந்த மலேசிய மண்ணில் கால் வைக்கக்கூடாது. மலேசிய அரசாங்கம், உள்துறை அமைச்சு, காவல்துறை, மலேசியாவுக்கான இந்தியத் தூதகரம் ஆகியவை இவரது வருகையை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும் என்று அந்த இந்து அமைப்புகள் தெரிவித்தன.