இந்தியர்களுக்கு 2,500 மெட்ரிகுலேஷன்இடங்களை ஒதுக்க வேண்டும் பிரதமருக்கு செனட்டர் சிவராஜ் வலியுறுத்தல்

கோலாலம்பூர், மார்ச் 20-
இந்தியர்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தும் தமது கடப்பாட்டை நிரூபிக்க இந்திய சமூகத்திற்கு 2,500 மெட்ரிகுலேஷன் இடங்களை ஒதுக்கும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அரசாங்க மேலவை உறுப்பினர் சி.சிவராஜ் வலியுறுத்தியுள்ளார்.


இதனால், மலாய்க்காரர்களின் ஆதரவை இழக்க வேண்டிவரும் என்று அன்வார் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்திய சமூகம் மிகவும் பின்தங்கியிருக்கிறது என்பதும் இதுபோன்ற உதவி அச்சமூகத்திற்குத் தேவைப்படுகிறது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும் என்றும் சிவராஜ் சுட்டிக் காட்டினார்.
பிரதமர் எனும் வகையில் அனைத்து இனங்களையும் நியாயமாகவும் சமமாகவும் நடத்த வேண்டும் என்பதை அன்வாருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்திய சமூகத்திற்குப் பிரதமர் உதவி செய்தால், சீன, மலாய் சமூகத்தினர்கூட மகிழ்ச்சியடைவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியர்களுக்கு உதவி செய்வதால், சீன, மலாய் சமூகங்கள் உங்களுக்கு அளித்துவரும் ஆதரவை நிறுத்திவிட மாட்டார்கள் என்று அவர் சொன்னார்.


வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துவரும் இந்திய சமுதாயத்தைக் கைதூக்கிவிட அவர்களுக்கு 2,500 இடங்களை வழங்குவது பேருதவியாக இருக்கும் என்று நேற்றுமுன்தினம் மாலையில் மேலவையில் உரையாற்றியபோது செனட்டர் சிவராஜ் குறிப்பிட்டார். அரச உரை மீதான விவாதத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை ஏற்கெனவே பிரதமரின் கவனத்திற்குச் சென்றதாகவும் ஆனால், அவரிடமிருந்து இதுவரை எந்த மறுமொழியும் கிடைக்கவில்லை எனவும் சிவராஜ் கூறினார்.


இந்திய சமூகத்திற்கு 2,500 மெட்ரிகுலேஷன் இடங்களை வழங்க வேண்டும் எனும் தமது பரிந்துரை பற்றி விவரிக்கும்படி கேட்டதற்கு, கடந்த 2017ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு மொத்தம் 1,600 இடங்கள் ஒதுக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்தபோது 2,200 இடங்கள் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு அந்த எண்ணிக்கை ஈராயிரத்திற்கும்கீழ் குறைந்துள்ளது. கடந்தாண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தது என்று மஇகாவின் முன்னாள் உதவித் தலைவருமான சிவராஜ் சுட்டிக்காட்டினார். அக்கட்சியிலிருந்து கடந்தாண்டு அவர் விலகிக் கொண்டார்.


மெட்ரிகுலேஷன் படிப்புக்கான முப்பதாயிரம் இடங்களில் வெறும் பத்து விழுக்காடு மட்டுமே மலாய் அல்லாத மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதில் சீனர்களுக்கு 5.4 விழுக்காடும் எஞ்சிய இடங்கள் இந்திய சமூகத்திற்கும் ஒதுக்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.