பேராவில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு ஆண்டு தோறும் ரிம10 மில்லியன் நிதி உதவி

தெலுக் இந்தான், மார்ச் 20-
மக்களுக்காக வழங்கப்படும் அரசாங்க நிதி உதவித் திட்டத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணியில் மோசடி நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக என்னிடமோ அல்லது ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனிடமோ புகார் வழங்கினால் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம் என பாசிர் பெர்டாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ காஹ் லியோங் தெரிவித்தார்.


நேற்று 19.3.2024 இல் தெலுக் இந்தான் நாடாளுமன்றம் ஜாலான் லக்ஸமணாவில் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோயில் புதியக்கட்டடத் திருப்பணிக்கு அமைச்சர் ஙா கோர் மிங் சார்பில் 40 ஆயிரம் வெள்ளிக்கான மாதிரி காசோலையினை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வூ காஹ் லியோங் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
கடந்த 2018இல் தெலுக் இந்தான் நாடாளுமன்றம் எதிர்க்கட்சியாக இருந்தபோதும்கூட ஙா கோர் மிங் இக்கோயிலுக்கு 15 ஆயிரம் வெள்ளி சொந்த நிதி வழங்கியுள்ளார். இன்று எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் கடந்த 2020/2021/2022 இந்த மூன்று ஆண்டுகளில் மாநில சார்பில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத்தலங்களுக்கு ஒரு காசுகூட வழங்கவில்லை.


அன்றும் முஸ்லிம் அல்லாத தலங்களுக்கு மாநில அரசு நிதி ஒதுக்கியது. அப்படியென்றால், ஒதுக்கப்பட்ட அந்த நிதி போனது எங்கே? அதே வேளையில், பக்காத்தான் ஹராப்பான் ஒற்றுமை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியில் சற்று தாமதித்தாலும் நிறைவேற்றுவதில் நேர்மறையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறோம் என்றார்.
பேராக் அரசாங்கத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் அல்லாதார் திருத்தலங்களுக்கு ஆண்டுக்கு மொத்தம் 10 மில்லியன் வெள்ளி நிதி உதவி வழங்கி வருகிறோம். அதில் சீன சமூகத்திற்கு தமது ஆட்சிக்குழு சார்பில் 5 மில்லியன் வெள்ளி தம்மிடமும், இந்திய சமூக நல விவகாரம், தேசிய ஒற்றுமைத்துறைக்கு தலைமை ஏற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசனிடம் 5 மில்லியன் வெள்ளியும் ஒப்படைக்கப்படுகிறது.


கோயில், திருச்சபைக்கு மானியம் கேட்டு விண்ணப்பம் செய்கின்றவர்கள் முறையாக செய்யவேண்டும். அந்த நிலம், கோயில் கட்டிடம் தனியாரின் பெயரில் இருந்தால் அந்த விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்பு உண்டு. மத்திய அமைச்சினை எடுத்துகொண்டாலும் மானியம் வழங்குவதற்கு தேவையான தகவல்கள் அனைத்தும் நேர்மறையாக இருத்தல் அவசியம் என வூ காஹ் லியோங் குறிப்பிட்டார்.
அந்த நிலையில், இக்கோயில் கட்டுமானப்பணிகள் நிறைவுப் பெற்றிட ஊராட்சி மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் அடுத்த கட்டத்திலும் நிதி உதவி கிடைக்கப்பெறும் வாய்ப்பு இக்கோயில் நிர்வாகத்திற்கு உண்டு. அதற்குள்ளாகவே இக்கோயில் திருப்பணி முழுமை அடைந்த நிலையில், நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தில் நாம் அனைவரும் ஒன்றாய் கலந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் என வூ காஹ் லியோங் எடுத்துரைத்தார்.


இந்த நிகழ்வில் சுற்று வட்டார இந்து சமயத்தினர், தெலுக் இந்தான் இந்து சங்கம் சார்பில் அதன் தலைவர் இரா.முனியாண்டி, நகராண்மைக் கழக உறுப்பினர்கள் சந்திரன், கோபால் என திரளானோர் வருகை அளித்துள்ளனர்.