“தேனிலவு முடியப் போகிறது; இனிமேல்தான் என்னுடைய ஆட்சி தொடங்கும்”

கோலாலம்பூர், மார்ச் 20-
பேரரசர் பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழிந்து விட்டன. இனிமேல்தான், என்னுடைய அசல் பாணியிலான ஆட்சி தொடங்கப் போகிறது என்று மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நேற்று அறிவித்தார்.
தேனிலவு கிட்டத்தட்ட முடிவடையும் தறுவாயில் உள்ளது. பேரரசர் பொறுப்புக்கு வந்த இரண்டு மாதங்கள் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாள்களே எஞ்சியுள்ளன.


தேனிலவுக் காலம் முடிவடைந்தவுடன் நாட்டுத் தலைவர் எனும் வகையில் அசல் பாணியிலான எனது கண்காணிப்புப் பணியை மேற்கொள்வேன் என்றார் அவர்.
“நான் வழிபடக்கூடிய ஒரு சிலை அல்ல. சடங்குகளில் பயன்படுத்தக்கூடிய ஓர் அலங்காரப் பொருளும் அல்ல. அல்லது அமைச்சர்களின் ஒவ்வொரு வார்த்தையையும் விருப்பத்தையும் பின்பற்றி நடக்கக்கூடியவனும் அல்லன்” என்று சுல்தான் இப்ராஹிம் தீர்க்கமாகக் குறிப்பிட்டார்.


மக்கள் மற்றும் நாட்டின் நலன்களைப் பாதுகாக்கக்கோரும் மலாய் ஆட்சியாளர்களின் நம்பிக்கை என் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என்று இஸ்தானா நெகாராவில் கூட்டரசு பிரதேச நாளை முன்னிட்டு நடைபெற்ற விருதளிப்புச் சடங்கில் உரையாற்றியபோது மாமன்னர் தெரிவித்தார், அச்சடங்கில் பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியாவும் கலந்து கொண்டார்.
விருதளிப்பு பற்றி குறிப்பிட்ட சுல்தான் இப்ராஹிம், கூட்டரசு பிரதேசத்திற்கு நற்சேவை வழங்கியவர்களையும் சிறந்த வகையில் பங்காற்றியவர்களையும் அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு விருதுகளும் பட்டங்களும் பதக்கங்களும் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்


தேர்வுக்குழுவினரால் தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு விருதாளரையும் தனிப்பட்ட முறையில் நான் ஆராய்ந்தேன். அந்த வகையில், இவ்வாண்டு 36 நபர்கள் மட்டுமே பட்டம் பெறுவதற்குத் தகுதியானவர்களாக உள்ளனர் என்றார்.
இச்சடங்கில், கோலாலம்பூர் மேயர் டத்தோ கமாருஸமான் மாட் சாலே, எஸ்எம்டபிள்யூ எனும் உயரிய விருதைப் பெற்றார். இது டத்தோஸ்ரீ விருதைத் தாங்கிய பட்டமாகும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி, பிரதமர்துறை அமைச்சர் ( கூட்டரசு பிரதேசம்) டாக்டர் ஜலீஹா முஸ்தாபா ஆகியோரும் இச்சடங்கில் கலந்து கொண்டனர்.