இந்தியர்களுக்கு அதிக நன்மைகளை கொண்டுவரும் திட்டங்கள் மீது மித்ரா தனிக் கவனம் செலுத்தும்

புத்ராஜெயா, மார்ச் 21-
இந்திய சமூகத்திற்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் மீது மித்ராவின் ( மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு ) செயல்திட்ட பயிலரங்கு தனிக் கவனம் செலுத்தும் என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் ஏரன் அகோ டாகாங் நேற்று தெரிவித்தார்.


“மித்ரா முகமை என்னுடைய அமைச்சின்கீழ் இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது. மித்ரா செயல்பாட்டு இலக்கின் மீது மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டின் இந்திய சமூக நடவடிக்கைத் திட்டத்தில் (பிடிஎம்ஐ) நிலவி வந்த பல குறைபாடுகள் களையப்பட்டு அதன் போக்கில் புதுமாற்றம் கொண்டுவரப்படும் என்றார் அவர்.


பெமாண்டு எனப்படும் செயல்திறன் மேலாண்மை மற்றும் சேவையளிப்புப் பிரிவு) அத்திட்டத்தை விரிவாக ஆராய்ந்ததில், 23 வியூகத் திட்டங்களில் ஆறு திட்டங்களில் மட்டுமே மித்ரா சம்பந்தப்படுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று ஏரன் அகோ குறிப்பிட்டார்.


இருந்தபோதிலும், அத்திட்டங்களை மித்ராவின் ஆளுமையின்கீழ் கொண்டு வருவதற்கு இந்தப் பயிரங்கு உதவும் என்று புத்ராஜெயாவில் அவர் குறிப்பிட்டார்.
மித்ராவின் வியூகத் திட்டங்கள் வறுமை ஒழிப்பையும் குடியுரிமை, அடையாள ஆவண விவகாரங்கள், ஆலய, சமய பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டவை ஆகும். பெண்களின் நல்வாழ்வு சம்பந்தப்பட்ட விவகாரங்களையும் அது கையாள்கிறது.