தாய்மொழிப் பள்ளிகளால் ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறதுதீவிரவாதச் சிந்தனைகளுக்கு இடமில்லை

  • சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஸுல்கிப்ளி

பெஸ்தாரி ஜெயா, மார்ச் 21-
இந்நாட்டில் ஒற்றுமையாக தாய்மொழிப் பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அதுகுறித்த தீவிரவாதச் சிந்தனைகள் கொண்ட கருத்துகளைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அமாட் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலசிலாங்கூர் மண்ணின் மைந்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஸுல்கிப்ளி மேற்கண்டவாறு பேசினார்.
மலேசியாவில் தாய்மொழிக் கல்வி என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அது குறித்து யாரும் எவ்வித கருத்தையும் எதிர்மறையாகப் பேசக்கூடாது.


தமிழ்ப்பள்ளிகளும் சீனப்பள்ளிகளும் இந்நாட்டில் ஒற்றுமையை வளர்க்கும் தளங்களாக் இன்றுவரை விளங்கி வருகின்றன.
அரசியல் சுயநலத்திற்காகச் சிலர் தவறான சிந்தனைகளை விதைத்து மக்கள் மத்தியில் குழப்பம் செய்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
நாட்டில் தேசிய மொழி பிரதான மொழியாக இருந்தாலும், தாய்மொழிக் கல்வியும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி ஒற்றுமையைச் சிதைக்கலாம் என்று யாரும் நினைக்கக்கூடாது என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் கோலசிலாங்கூர் மண்ணின் மைந்தர்கள் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரும் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் மூத்த தலைவருமான பெ.திருமூர்த்தி உரையாற்றினார்.
இன்று தாய்மொழிக் கல்வி பற்றி தவறான சிந்தனைகள் பரப்பப்பட்டு வருகின்றன.
பத்தாங் பெர்ஜுந்தை, சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் படித்த மாணவன் நான், மலாயாப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று இன்று உலகரீதியில் சிறந்த விஞ்ஞானியாக இருப்பது நமக்கெல்லாம் பெருமையாகும்.
இதன் மூலம் தமிழ்ப்பள்ளிகளின் பெருமையை நாம் உணர முடியும் என்று திருமூர்த்தி கூறினார்.


இந்நிகழ்ச்சியில் ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்பு வருகை மேற்கொண்டு மண்ணின் மைந்தர்களுக்கு சிறப்புச் செய்தார்.
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளரும் மண்ணின் மைந்தருமான க.முருகன் இந்நிகழ்ச்சியில் சிறப்புச் செய்யப்பட்டார்.