சமய தீவிரவாதம் தொடர்ந்தால்மலேசியா வீழ்ச்சியடைந்துவிடும் இயக்கவாதி எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 21-
சமய சகிப்பின்மையையும் தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்தாவிட்டால், மலேசியா ஒரு தோல்வியடைந்த நாடாக மாறும் அபாயம் உள்ளது என்று இயக்கவாதி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிகரித்துவரும் இன மற்றும் சமய சகிப்பின்மை தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் மிரட்டலை ஏற்படுத்தியுள்ளது என்று “குளோபல் ஹியூமன் ரைட்ஸ் ஃபவுண்டேஷன்” எனும் மனித உரிமைகள் அமைப்பின் துணைத் தலைவர் பீட்டர் ஜான் ஜபான் தெரிவித்தார்.


மலேசியாவில் இப்போது இனவாதம் பரவலாகவும் நீடித்து வருவதாகவும் உள்ளது. இது நாட்டைத் தொடர்ந்து ஆட்டிப்படைத்து வருகிறது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் பீட்டர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் பிறவற்றோடு, தாய்மொழிப் பள்ளிகள் மற்றும் ரமலான் மாதத்தில் பள்ளிச்சிற்றுண்டிகள் திறப்பது தொடர்பான சினமூட்டக்கூடியதும் பிரச்சினையைக் கிளறிவிடக் கூடியதுமான பல அறிக்கைகள் அண்மையில் வெளியாகிருப்பதையும் பீட்டர் சுட்டிக்காட்டினார்.


இனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒருதலைப்பட்சமான கொள்கைகள் தாங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறோம் எனும் ஏமாற்ற உணர்வை இதர சமூகங்களிடம் ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
பண்பாடு, சமய உணர்வுகளைப் புண்படுத்தும் எனும் காரணத்தின்பேரில் வெளிநாட்டுக் கலைஞர்களுக்கு எதிராக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் வழிகாட்டிகளும் நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும். மலேசியாவில் இன, சமய சகிப்பின்மை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் சமூக நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் ஒரு மிரட்டலாக விளங்கி வருகிறது. கலாச்சார, சமய சுதந்திரம் பாதிக்காத வண்ணம், பன்மைத்துவத்தை அரவணைப்பதிலும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும்தான் மலேசியாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்றார் அவர்.
இனவாதம், மதவெறி, தீவிரவாதம் ஆகியவற்றை ஒடுக்குவதற்கு அதிகாரிகள் இன்னும் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்றும் பீட்டர் சொன்னார்.