ஆதாயத்திற்காக சிறுபான்மையினரை அவமதிக்கக் கூடாது பிரதமர் அன்வார் வலியுறுத்தல்
புத்ராஜெயா, மார்ச் 22-
மற்றவர்களுக்கு எதிராக கூச்சலிட்டோ சத்தமிட்டோ எதனையும் அடைய நினைக்கக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவுறுத்தினார்.
மற்றவர்களை அவமதிப்பதற்காக கூச்சலிடுவதன் வாயிலாகவோ உரக்க சத்தமிடுவதாலோ எந்த லாபமும் வெற்றியும் நமக்கு கிடைக்கப் போவதில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.
புத்ராஜெயாவில் அரசு ஊழியர்களுடன் நேற்று நடைபெற்ற மலேசியா மடானி கலந்துரையாடலின்போது பிரதமர் அவ்வாறு கூறினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மலாய்க்காரர்கள், மலாய்மொழி, மலாய் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட உரிமைகள் கூட்டரசு அரமைப்புச் சட்டத்தின் வாயிலாகவும் இதர சட்டங்கள் வாயிலாகவும் பாதுகாக்கப்பட்டு வந்தாலும், சிறுபான்மைச் சமூகங்களை அவமதிக்கலாம் அல்லது தாழ்வாக நடத்தலாம் என்பது இதன் பொருளல்ல என்றார் அன்வார்.
இந்நாட்டில் மலாய்க்காரர்கள்தான் பெரும்பான்மையினராக இருக்கின்றனர் என்றாலும் மற்ற இனத்தவரும் இங்கு இருக்கின்றனர் என்பதை மறக்கக்கூடாது. மலேசிய மக்கள்தொகையில் அறுபது விழுக்காடு மலாய்க்காரர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், மலேசியா இன்னும் ஒரு பல்லின நாடு எனும் உண்மையையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.
நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்வதற்கு சிறுபான்மை இனத்தவரும் தத்தம் பங்காற்ற வேண்டும். காலத்திற்கு™ ஒவ்வாத விஷயங்களிலும் அற்ப விவகாரங்களிலும் நேரத்தை வீணாக்காமல் நாட்டை மேலும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
ஊழலை ஒழித்து உயர்நெறிகளையும் கட்டொழுங்கையும் கடைப்பிடித்து நடந்தால் மலேசியா ஒரு மகத்தான நாடாக மாற முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விவேகத்துடன் நாம் நடந்து கொள்ள வேண்டும். ஒருபோதும் ஊழலை அனுமதிக்கக்கூடாது. மலேசியா ஒரு சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், உலக அரங்கில் நம்மால் ஆன்மாவின் குரலாக ஒலிக்க முடியும். ஊழலை எதிர்த்து நாம் உரக்க குரலெழுப்ப வேண்டும் என்றார் அன்வார்.