நட்பு நாடுகளின் மக்களுக்கு நன்மை… தொடர்ந்து வளரட்டும் இந்தியா – மலேசியா உறவு! – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
மலேசியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் Dr. S. ஜெய்சங்கருடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வர்த்தகம், கல்வி, விவசாயம், சுற்றுலா, பாதுகாப்பு, டிஜிட்டல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக அன்வார் குறிப்பிட்டார்.
சமீபத்தில் மலேசியா அரிசி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டபோது உதவியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமது பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) கிளை வளாகத்தை இங்கு நிறுவுவதற்கு மலேசியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக பிரதமர் கூறினார்.
ஆசியானுடனான உறவுகள், குறிப்பாக மலேசியா அடுத்த ஆண்டு தலைவராக வரும்போது, தொடர்ந்து பலப்படுத்தப்படும் என்று இந்தியா நம்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இரு நட்பு நாடுகளின் மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் மலேசிய இந்திய உறவு தொடர்ந்து வளரட்டும் என்று அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்!