இரண்டாம் கட்ட ரஹ்மா உதவிநிதி;புதன்கிழமை முதல் வழங்கப்படும்

கோலாலம்பூர், ஏப். 2-
பி40 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான இரண்டாம் கட்ட ரஹ்மா ரொக்க உதவிநிதி நாளை புதன்கிழமையிலிருந்து விநியோகிக்கப்படும். இத்திட்டத்தின்கீழ் 84 லட்சம் மக்களுக்கு100 வெள்ளி முதல் 650 வெள்ளிவரை உதவிநிதி வழங்கப்படும் என்று நிதியமைச்சு நேற்று தெரிவித்தது.
குடும்ப வருமானம் 1,500வெள்ளிக்கும் குறைவாக உள்ளவர்கள் 150 முதல் 650 வெள்ளி வரையிலும் குடும்ப வருமானம் 2,500 வெள்ளி முதல் 5,000 வெள்ளிக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளவர்கள் 100 வெள்ளி முதல் 300வெள்ளி வரையிலும் உதவிநிதி பெறுவார்கள் என்று அது குறிப்பிட்டது.


இதனிடையே, துணையின்றி தனியாக வாழும் மூத்த குடிமக்களுக்கு 150 வெள்ளியும் மணமாகாத நபர்களுக்கு 100 வெள்ளியும் வழங்கப்படும் என்றும் அது கூறியது.
ரஹ்மா உதவிநிதித் திட்டத்திற்காக இவ்வாண்டில் 150கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை 126 கோடி வெள்ளியாகும். இவ்வாண்டின் ஒதுக்கீடு இருபது விழுக்காடுவரை உயர்த்தப்பட்டிருப்பதை இது காட்டுகிறது.


மடானி அரசாங்கம் மேற்கொண்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நாட்டின் நிதிவளத்தை மட்டும் மேம்படுத்துவதாக இருக்காது. மாறாக, அதன் செல்வ வளம் அனைத்து மக்களுக்கும் சமமான அளவில் பகிர்ந்தளிக்கப்படுவதையும் உறுதிசெய்யும் என்று நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதிநிலை சீரடைந்து வருவதால் ரொக்க நிதியுதவித்தொகையை அரசாங்கம் மேலும் உயர்த்தும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் சொன்னார்.