ஊழல்வாதிகளை விடாதீர்கள்!எம்ஏசிசிக்கு பேரரசர் வலியுறுத்தல்

கோலாலம்பூர், ஏப். 2-
பேரரசராகப் பொறுப்பு வகிக்கப் போகும் ஐந்தாண்டு காலகட்டத்தில் ஊழலுக்கு எதிரான போராட்டம்தான் தமது தலையாய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார்.
மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையத்தின் ( எம்ஏசிசி) தலைவர் அஸாம் பாக்கியுடனான சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். எம்ஏசிசி கைகொண்டுவரும் ஆகக் கடைசி நிலவரங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காக அச்சந்திப்பு நடைபெற்றது.


“நான் ஏற்கெனவே அறிவித்தபடி, என்னுடைய தேனிலவு முடிந்து விட்டது. தேனீக்களைப் பிடிப்பதுதான் இனிமேல் என்னுடைய வேலையாக இருக்கும்” என்று பேரரசர் குறிப்பிட்டார்.
லஞ்சஊழல்தான் நாட்டின் மிகப் பெரிய எதிரி என்றும் அவர் எச்சரித்தார்.
தம்முடைய “ தேனிலவு” காலம் முடிந்து விட்டது என்பதைக் குறிப்பதற்காக தேன் அடங்கிய கலமொன்றையும் அஸாமிடம் சுல்தான் இப்ராஹிம் நேற்று வழங்கினார். அவர்களின் சந்திப்பு முப்பது நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது.
சுல்தான் இப்ராஹிம் கடந்த ஜனவரி 31ஆம் தேதியன்று நாட்டின் பதினேழாவது பேரரசராகப் பொறுப்பேற்றார்.


நாற்பத்தேழு லட்சம் வெள்ளி லஞ்சம் வாங்கிய சந்தேகத்தின்பேரில் மார்ச் 11ஆம் தேதிக்கும் 25ஆம் தேதிக்கும் இடையில் 34 சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று அஸாம் அறிவித்திருந்தார்.
சிப்பாங்கின் கேஎல்ஐஏ சரக்குப் பட்டுவாடா முனையத்தில் 2017ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவரும் கடத்தல் கும்பல்களின் நடவடிக்கையினால் மலேசியாவுக்கு 200 கோடி வெள்ளி வரிஇழப்பு ஏற்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியோடு அக்கடத்தல் நடந்துள்ளது என்று அஸாம் தெரிவித்திருந்தார்.


புகையிலை, சிகரெட்டுகள், மதுபானம், சுகாதாரப் பொருள்கள், வாகன உபரிப் பாகங்கள் கடத்தலில் அக்கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது. பரிசோதனை செய்யப்படாமல் பொருள்களை இறக்குமதி செய்ய சம்பந்தப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அக்கும்பல் லஞ்சம் கொடுத்து வந்துள்ளது. அதன் தொடர்பில் நிறுவன உரிமையாளர்கள் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.