சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியை துறந்தார் தெங்கு ஸஃப்ருல்

கோலாலம்பூர், ஏப். 2-
சிலாங்கூர் அம்னோவின் பொருளாளர் பதவியிலிருந்து தெங்கு டத்தோஸ்ரீ ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் விலகியுள்ளார். அம்மாநில கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக அப்பதவியிலிருந்து விலகுவதாக முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று தாம் கருதுவதாகவும்
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான அவர் கூறினார்.
கூட்டரசு நிலையில் உறவு சீராக உள்ள நிலையில், இதர கட்சிகளுடன் அம்னோ கொண்டுள்ள உறவினால் அக்கட்சிக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனும் கருத்து தவறானது. தற்போதையப் பிரச்சினைக்கு மாநில அம்னோவின் மனப்போக்கும் அணுகுமுறையுமே காரணமாகும் என்றார் அவர்.


ஓராண்டுக்கு முன்பு சிலாங்கூர் அம்னோ உச்சமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலப்பொருளாளராக நியமிக்கப்பட்ட பின்னர் மாநில அம்னோவில் ஒரு புத்தெழுச்சியை உருவாக்க உறுதிபூண்டேன் என்று ஸஃப்ருல் சொன்னார்.
மலாய் பூமிபுத்ராக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட சிலாங்கூரில் அம்னோ பலவீனமடைந்துள்ளது. கடந்த மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் இது உறுதிப்படுத்தப்பட்டது. அம்மாநிலத்தில் அம்னோ வலுவுடன் இல்லாத நிலையில், அக்கட்சியை தேசிய கட்சியென்றோ எதிர்காலத்திற்கான ஒரு கட்சியென்றோ கருத முடியாது. அந்நிலையில், மாநில அம்னோவில் தீவிர மாற்றங்களை உடனடியாகச் செய்ய வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
என்னால் அந்த சாதகமான மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. எனவே, பதவியை விட்டு விலகுவதுதான் சரி என்று முடிவு செய்தேன். அம்னோ சிலாங்கூர் பொருளாளர் பதவியிலிருந்து உடனடியாக விலகிக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.