அரசு ஊழியர்களின் சம்பள மறுஆய்வு;அக்டோபரில் அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், ஏப். 4-
வரும் அக்டோபர் மாதம் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் வேளையில், அரசு சேவைத்துறைக்கான புதிய சம்பளத் திட்டம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
புதிய சம்பளத் திட்டம் மீதான பொதுச்சேவை ஊதியமுறை ஆய்வு (எஸ்எஸ்பிஏ) இறுதிக் கட்டத்தில் உள்ளது. மேல்பரிசீலனைக்காக அமைச்சரவையிடம் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று பிரதமர்துறை அமைச்சர் ( கூட்டரசு பிரதேசம்) டாக்டர் ஜலீஹா முஸ்தாபா கூறினார்.
அரசு ஊழியர்களின் சம்பள மறுஆய்வு மீது அரசாங்கம் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. எஸ்எஸ்பிஏ திட்டத்தை அமல்படுத்தும் கடப்பாடும் அதற்கு உள்ளது என்று டாக்டர் ஜலீஹா சொன்னார்.
அத்திட்டம் நியாயமானதாகவும் சாத்தியப்பூர்வமானதாகவும் இருக்கும் என்றார் அவர்.


பிப்ரவரி முதல் தேதியிலிருந்து அரசுத்துறையில் சேரும் புதிய ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் (பென்ஷன்) சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் அதற்குப் பதிலாக ஊழியர்கள் சேமநிதி வாரியம் ( இபிஎஃப்) மற்றும் சமூக காப்புறுதி நிறுவனம் (சொக்சோ) ஆகியவற்றுக்கு அவர்கள் சந்தாசெலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் அறிவித்திருந்தார். அதுபற்றி விரிவாக விளக்கமளிக்குமாறு செனட்டர் டான்ஸ்ரீ அனிபா அமான் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு அன்வாரின் சார்பில் டாக்டர் ஜலீஹா நேற்று நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.
இவ்வாண்டு இறுதிக்குள் புதிய சம்பளத் திட்டத்தை அமலுக்குக் கொண்டுவர அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாக அன்வார் இதற்கு முன்பு அறிவித்திருந்தார்.