மன்னரிடம் மன்னிப்புக் கோரினார் “கேகே மார்ட்” நிறுவனர்

கோலாலம்பூர், ஏப். 4-
“அல்லாஹ்” காலுறை விவகாரம் தொடர்பாக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிடம் “கேகே மார்ட்” விற்பனையகத்தின் நிறுவனர் சாய் கீ கான் நேற்று மன்னிப்புக் கோரினார்.
பதினைந்து நிமிடங்களுக்கு நீடித்த சந்திப்பின்போது கேகே மார்ட் விற்பனையகத்தில் “அல்லாஹ்” எனும் வார்த்தை பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்கப்பட்டதற்காக கேகே சாய் என அறியப்படுபவரான சாய் மன்னரிடம் மன்னிப்புக் கேட்டார்.
அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது என்று அரச பத்திரிகை அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


“மக்களைத் தூண்டிவிடுவது உள்பட எந்தவொரு தரப்பும் இவ்விவகாரத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்று மறுபடியும் எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த விவகாரத்தை மேலும் நீட்டித்துக் கொண்டிருக்கக் கூடாது” என்று சுல்தான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
குறிப்பாக, இறக்குமதி செய்யப்படும் பொருள்களை விற்பனைக்கு வைக்கும்போது கேகே மார்ட் உள்பட எல்லா வர்த்தகர்களும் சில்லறை வியாபாரிகளும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


“அல்லாஹ்” எனும் வார்த்தை காணப்படும் காலுறைகள் பண்டார் சன்வேயில் உள்ள கேகே மார்ட் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சி மார்ச் 13ஆம் தேதியன்று சமூக ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை மூண்டது. அதற்காக கேகே மார்ட் நிறுவனர் சாயும் அதன் இயக்குநரான அவரின் மனைவியும் உடனடியாக மன்னிப்புக் கேட்டனர்.அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. ஆயினும், அந்த விற்பனையகங்களைப் புறக்கணிக்கும்படி அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் டாக்டர் அக்மால் சாலே கோரிக்கை விடுத்துள்ளார்.