இந்திய சமுதாயத்தைப் புறக்கணிக்கிறேனா? – பிரதமர் விளக்கம்

ஒற்றுமை அரசாங்கம் இந்திய சமூகத்தின் நலனை ஒருபோதும் புறக்கணிக்கவில்லை, மாறாக  இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவ பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அல்லது செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தினரின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஏற்ப, அவர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் பினாங்கில் கடுமையான வறுமையை ஒழித்ததன் வெற்றியை மேற்கோள் காட்டிய அவர், வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் இன வேறுபாடின்றி மேற்கொள்ளப்பட்டதாகவும், அத்தகைய முயற்சிகள் இந்திய சமூகத்தையும் உள்ளடக்கியதாகவும் அவர் கூறினார்.

எண்ணிக்கையில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலானில் இந்த முயற்சியின் கீழ் அதிகம் பயனடைந்தவர்கள் இந்தியர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

வறுமையின் பிரச்சினையை தாம் இனக் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், யாராக இருந்தாலும், அவர்கள் கடுமையான வறுமைப் பிரிவின் கீழ் வந்தால், அவர்களுக்கு உதவிகள் கிடைக்கும் என்று ஷா ஆலம் IDCC மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற   டாக்டர் அம்பேத்கர் அனைத்துலக மாநாட்டை தொடக்கி வைத்து  உரையாற்றுகையில் அன்வார் இதனைத் தெரிவித்தார்.

இந்திய சமூகத்திற்கான கல்வி தொடர்பாக, சிலாங்கூர் மற்றும் பேராக்கில் நான்கு புதிய SJKT பள்ளிகள் மற்றும் நெகிரி செம்பிலானில் மேலும் இரண்டு பள்ளிகளை அமைப்பது உட்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அன்வார் கூறினார்.

இந்திய சமூகத்திற்காக நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறுவது உண்மையல்ல… மேலும் SJKT இன் வளர்ச்சிக்கு 3 கோடி வெள்ளியும், கல்வி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக  50 லட்சம் வெள்ளியும் தாம் அறிவித்திருந்ததை அன்வார் சுட்டிக்காட்டினார்.

இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்க 5 கோடி வெள்ளி அறிவிப்பின் மூலம் மைக்ரோ கிரெடிட் அமைப்பு உருவாக்கியுள்ளோம்.  முதலில் மலாய்க்காரர்களுக்காக உருவாக்கப்பட்ட அமானா இக்தியார் மலேசியா (ஏஐஎம்) செயல்பாடுகளை அரசாங்கம் இந்தியர்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார்!