டாயிம் ஸைனுடின் மீதான விசாரணை;நால்வரிடம் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர், ஜன. 5-
முன்னாள் நிதியமைச்சர் டாயிம் ஸைனுடினுக்கு எதிராக நடைபெற்றுவரும் விசாரணை தொடர்பில் நால்வரிடமிருந்து மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் ( எம்ஏசிசி) நேற்று வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.
ஒரு சில மணிநேரத்திற்கு முன்பே வழங்கப்பட்ட அழைப்பாணையை ஏற்று அந்நால்வரும் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு விசாரணைக்காக வந்திருந்தனர். ஆயினும், அவர்களோடு தத்தம் வழக்கறிஞர்கள் உடன்வர முடியாது என்று எம்ஏசிசி அதிகாரிகள் தடை விதித்தனர்.
இதற்கு அந்த வழக்கறிஞர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். விசாரணை அறைக்குள் நுழைய தங்களுக்கு எம்ஏசிசி தடை விதித்ததை ஏற்க முடியாது என்று வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் குறிப்பிட்டார்.எம்ஏசிசி ஆணையத்தின் அம்முடிவு ஒடுக்குமுறையானது, சட்டவிரோதமானது, தன்மூப்பானது என்று அவர் சாடினார்.
விசாரணை அறைக்குள் தனது கட்சிக்காரருடன் ஒரு வழக்கறிஞர் உடனிருந்தார்.
ஆனால், அங்கு அவசர அவசரமாக வந்த எம்ஏசிசி அதிகாரிகள் அவரையும் இதர வழக்கறிஞர்களையும் அங்கிருந்து வெளியேறும்படி வற்புறுத்தினர். இதன் மூலம், எங்களின் கட்சிக்காரர்களைப் பிரதிநிதிப்பதற்கும் ஆலோசனை கூறுவதற்குமான வாய்ப்புகளை எம்ஏசிசி தட்டிப் பறித்து விட்டது என்று அறிக்கையொன்றின்வழி ராஜேஷ் குறிப்பிட்டார்.
அது குறித்து வழக்கறிஞர்கள் விசாரித்தபோது, அது மேலதிகாரிகளின் உத்தரவு என்று சம்பந்தட்ட எம்ஏசிசி அதிகாரிகள் பதிலளித்தனர் என்று அவர் கூறினார்.
எம்ஏசிசியின் இந்நடவடிக்கை தேவையற்றதும் இதற்குமுன்னர் நடந்திராத ஒன்றும் ஆகும். ஒருவர் சட்டரீதியான பிரதிநிதித்துவத்தைப் பெறுவது அவரின் புனிதமான உரிமையாகும். தமது வழக்கறிஞருடன் கலந்தாலோசிப்பதற்கு அவருக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்க வேண்டும். எம்ஏசிசியின் நடவடிக்கை அருவருப்பான தன்மையைக் கொண்டது என்றார் அவர்.
லஞ்சஊழலிலும் கள்ளப்பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் டாயிம் ஸைனுடினை தாங்கள் விசாரித்து வருவதாகவும் அதன் தொடர்பில் அவருடைய குடும்பத்தினருக்குச் சொந்தமான “இல்ஹாம் டவர்” எனும் அறுபது மாடிகள் கொண்ட கட்டடமொன்றை பறிமுதல் செய்திருப்பதாகவும் கடந்த மாதம் எம்ஏசிசி அறிவித்திருந்தது.ஆனால், தாம் ஊழலிலும் முறைகேட்டிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுவதை டாயிம் மறுத்துள்ளார்.